‘வாணவேடிக்கை’ படத்தின் 25வது நாள் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி. சர்ப்ரைஸ் விசிட்!
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் எம்.பி. எல்.கே. சுதீஷ் தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘வாணவேடிக்கை’. இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் 25வது நாள் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நட்சத்திர பங்களாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அன்றைய படப்பிடிப்பில் கதாநாயகன் சண்முக பாண்டியன், கதாநாயகி சிவானி ராஜசேகரன் ஆகியோருடன் ஜெயப்பிரகாஷ், சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுபிக்ஷா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி. திடீர் வருகை தந்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்வி ஆகியோர் காட்சிகளை படமாக்கிய விதத்தை நேரில் கண்டு ரசித்த அவர், படப்பிடிப்பு பணிகள் குறித்து படக்குழுவினருடன் கலந்துரையாடினார்.
படத்தின் பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு இன்று தான் முதன்முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்த எல்.கே. சுதீஷ், கடந்த ஒரு மாதமாக நாடாளுமன்ற பணிகளுக்காக டெல்லியில் இருந்ததாகவும், மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, படக்குழுவினருடன் இணைந்து மதிய உணவு அருந்திய அவர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் கலகலப்பாக பேசி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். தயாரிப்பாளரின் திடீர் வருகை படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமான சூழலை ஏற்படுத்தியது.
‘வாணவேடிக்கை’ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாகவும், சிவானி ராஜசேகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், பருத்திவீரன் சரவணன், சாரா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கும்கி அஸ்வின், இந்துமதி, ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை திரு இயக்குகிறார். ஆர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ரா. சுதர்சன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகவும், ஆக்சன் சந்தோஷ் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றுகின்றனர். ஜீவ காருண்யா ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.