தமிழக வெற்றிக் கழகத்தில் இன்னும் இருக்கிறேனா என்பதே தெரியவில்லை; தமிழர் நலனே முக்கியம் – மன்சூர் அலிகான் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்தில் தான் இணைந்திருந்தாலும், தற்போது அந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்கிறேனா, இல்லையா என்பதே தனக்குத் தெரியவில்லை என்றும், அரசியல் கட்சிகளை விட தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கே தான் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உள்ள சாய்பாபா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சில திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசுத் தரப்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்து பேசிய அவர், “நான் ஏதோ ஒரு கட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தேன். அதன்பிறகு அமைதியாகவே இருந்து வருகிறேன். தற்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்பதே எனக்குத் தெரியவில்லை” என்றார்.
தான் தனது பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த மன்சூர் அலிகான், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே தன்னை அதிகம் பாதிப்பதாகக் கூறினார். கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், காவல் நிலையங்களில் நிகழும் மரணங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் போன்றவை நடைபெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கர்நாடகாவில் அணை கட்டும் விவகாரம் குறித்தும் அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த நடவடிக்கை தமிழகத்தின் நீர்வளத்தையும், விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்றும், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழர் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த விவகாரங்களில் மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் கூறினார். எஸ்ஐஆர், நீட் தேர்வு மற்றும் இவிஎம் தொடர்பான விவகாரங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பெரிய அளவிலான போராட்டங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் தனது தற்போதைய நிலை குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தமிழர் நலன் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதே தனது நிலைப்பாடு என்றும் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியில் தெரிவித்தார்.