ரசிகர்களின் ஃபேவரைட் ‘எண்ட்கேம்’ மீண்டும் திரையில் – ‘டூம்ஸ்டே’ முன்னோட்டத்துடன்!

14

மார்வெல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான இப்படத்தின் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’பதிப்பு, வரும் செப்டம்பர் 25, 2026 முதல் இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையிடப்படுகிறது.

மார்வெல் ஸ்டுடியோஸின் புதிய பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் (PLF) அனுபவமான இன்ஃபினிட்டி விஷன் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. பெரிய திரை, அதிக ஒளிர்வு கொண்ட காட்சிகள் மற்றும் மேம்பட்ட ஒலி அனுபவம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை இதுவரை இல்லாத பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தில் மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், இந்த என்கோர் வெளியீட்டின் முக்கிய சிறப்பம்சமாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டக் காட்சியும் இடம்பெறுகிறது. குறிப்பாக ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் சான்றிதழ் பெற்ற திரையரங்குகளில் ‘எண்ட்கேம் – என்கோர்’ படத்தை காணும் ரசிகர்களுக்கு, ‘டூம்ஸ்டே’ படத்தின் கூடுதல் பிரத்யேக ஸ்னீக் பீக் காட்சியையும் காணும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம், தானோஸ் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு பிரபஞ்சத்தின் நிலை எவ்வாறு மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டது. உலக மக்கள் தொகையில் பாதி பேர் அழிந்த நிலையில், மீதமுள்ள அவெஞ்சர்ஸ் ஹீரோக்கள் தங்களது இழப்பிலிருந்து மீண்டு வர போராடுகின்றனர். இறுதியில், தங்கள் அன்புக்குரியவர்களை மீட்டெடுத்து பிரபஞ்சத்தில் மீண்டும் ஒழுங்கையும் அமைதியையும் கொண்டுவரும் நோக்கில் அவர்கள் ஒன்றிணைந்து தானோஸுக்கு எதிரான மாபெரும் இறுதிப்போரில் களம் இறங்குகின்றனர்.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் முக்கியமான கதாபாத்திரங்களும் சம்பவங்களும் ஒன்றிணைந்த இந்த திரைப்படம், உலகளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது மீண்டும் பெரிய திரைக்கு வருவதன் மூலம், பழைய ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை மீண்டும் வழங்குவதோடு, புதிய தலைமுறை ரசிகர்களுக்கும் இந்த பிரம்மாண்டமான திரை அனுபவத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை கெவின் ஃபீஜ் தயாரித்துள்ளார். ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இணைந்து இயக்கியுள்ளனர். லூயிஸ் டி’எஸ்போசிட்டோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, ட்ரின் ட்ரான், ஜான் ஃபேவ்ரோ, ஜேம்ஸ் கன் மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ திரைப்படம் செப்டம்பர் 25, 2026 முதல் இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. குறிப்பாக ‘டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக முன்னோட்டக் காட்சியுடன் வெளியாகவுள்ளதால், மார்வெல் ரசிகர்களிடையே இந்த மறுவெளியீட்டுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.