ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் ‘ராமாயணா’ – அக்டோபர் 27-ல் உலகளாவிய பிரீமியர்!

7

ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி, வரும் அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. அங்குள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெஃபென் திரையரங்கில் நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி, சர்வதேசத் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அழைப்பின் பேரில் மட்டுமே பங்கேற்கக்கூடிய இந்தப் பிரீமியர் நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், சர்வதேசத் திரைப்பட இயக்குநர்கள், ஊடகத்தினர் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். திரைப்பட வரலாறு, கலை மற்றும் தொழில்நுட்பத்தைப் போற்றும் வகையில் செயல்பட்டு வரும் அகாடமி மியூசியம், இதற்கு முன்பு பல்வேறு சர்வதேசத் திரைப்பட நிகழ்ச்சிகளையும் ஆஸ்கர் விருது தொடர்பான கொண்டாட்டங்களையும் நடத்தியுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இந்தப் பிரீமியர் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 945 பேர் அமரக்கூடிய டேவிட் கெஃபென் திரையரங்கில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் 3D பிரீமியர் காட்சி திரையிடப்பட உள்ளது.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பாரம்பரியத்தையும் பண்டிகைக் கொண்டாட்ட உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் பாரம்பரிய இந்தியப் பண்டிகை உடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், DNEG மற்றும் நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்திய இதிகாசத்தின் கதையையும் அதன் கற்பனை உலகத்தையும் நவீனத் திரைப்படத் தொழில்நுட்பத்தின் மூலம் பிரம்மாண்டமாகத் திரையில் கொண்டுவரும் நோக்கில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்திலான காட்சியமைப்புகள் மற்றும் 3D தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ள இப்படம், இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய பயணத்தில் முக்கியமான படைப்பாக அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் திரையிடப்பட உள்ளது. இந்தியாவிற்கு வெளியே இப்படத்தின் சர்வதேச விநியோகப் பணிகளை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இந்திய இதிகாசத்தை உலகத் திரையரங்குகளுக்குக் கொண்டு செல்லும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் சர்வதேசப் பிரீமியர், இந்தியத் திரையுலகின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.