15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட அறை… அதற்குள் ஒளிந்திருக்கும் மர்மம்! ‘418’ அக்டோபர் 23-ல் வெளியீடு!

6

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படமான ‘418’, வரும் அக்டோபர் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ளார். சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கி ஜிஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு உல்லாஸ் ஹைதூர் புரொடக்‌ஷன் டிசைனராகப் பணியாற்றியுள்ளார்.

பல்வேறு ஜானர்களில் தரமான திரைப்படங்களைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தனது படைப்புகள் மூலம் தமிழ் ரசிகர்களுடனான தொடர்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் திகில் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘418’, ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதியையும், அங்குள்ள அறை எண் 418ஐச் சுற்றி நிலவும் மர்மத்தையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அறிவியல், மூடநம்பிக்கை மற்றும் விளக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்கள் கதையில் இடம்பெற்றுள்ளன. அந்த அறை ஏன் இத்தனை ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது, அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்பதைக் கண்டறியும் வகையில் படத்தின் திரைக்கதை நகர்கிறது.

மனதை உலுக்கும் சூழல், மர்மம் நிறைந்த சம்பவங்கள் மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத திருப்பங்கள் எனத் திகில் ரசிகர்களைக் கவரும் வகையில் ‘418’ திரைப்படம் உருவாகியுள்ளது. அறை எண் 418க்குள் உண்மையில் என்ன நடந்தது, அதன் ரகசியங்களை வெளிக்கொண்டு வர முயற்சிப்பவர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்ற கேள்விகளுக்கான பதில்களைத் திரையரங்குகளில் ரசிகர்கள் காணலாம்.

பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி முதல் நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.