அமல் அஜித்துக்கு ஜோடியாகும் பிரியங்கா ராஜகுமாரன்… ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படப்பிடிப்பு தொடங்கியது!

6

Arul Murugann Picture மற்றும் Dream Runway 26th Century நிறுவனங்கள் சார்பில், க.இ. மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. அமல் அஜித் கதாநாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களமிறங்குகிறார்.

நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியினரின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் அமல் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இளம் தலைமுறையினரைக் கவரும் காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ உருவாகி வருகிறது. காதல், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இது அமையும் எனப் படக்குழு எதிர்பார்க்கிறது.

தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.இ. மணிகண்டன் என்கிற விமல் G, தனது தயாரிப்புத் துறை அனுபவம், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை செம்பர் V. முருகேசன் இயக்குகிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். T. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். படத்தொகுப்புப் பணிகளை இளங்கோ மேற்கொள்கிறார்.

மேலும், கண்ணன் S கலை இயக்குநராகவும், P.C. ஸ்டண்ட்ஸ் சண்டைப் பயிற்சியாளராகவும், பாபா பாஸ்கர் நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். பாடல்களுக்கு பா. விஜய் வரிகள் எழுதுகிறார்.

பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.