பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? – விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ டிரெய்லர்!

29

மர்மம், சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் நகைச்சுவை கலந்த புதிய தமிழ் வெப் சீரிஸான ‘ஆக்டோபஸ்’ தொடரின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அர்ச்சனா ரவிச்சந்திரன், அஷ்வின், வினோத் கிஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்தொடர், ஏழு எபிசோடுகளைக் கொண்டதாக உருவாகியுள்ளது. ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடர், வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் ZEE5 ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்த ஒரு குடியிருப்புப் பகுதி. அண்டை வீட்டுக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களைப் போலப் பழகும் அந்தச் சூழலில், இளம்பெண் ஒருவர் திடீரென மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காகக் காத்திருக்காமல், குடியிருப்புவாசிகளே களத்தில் இறங்கித் துப்பறியத் தொடங்குகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தேகம், விதவிதமான சதிக் கோட்பாடுகள், சூடான விவாதங்கள் என விசாரணை நகரும்போது, அந்தக் குடியிருப்பின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மங்களும் ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்குகின்றன. காணாமல் போன பெண்ணுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதே தொடரின் மையக் கேள்வியாக அமைந்துள்ளது.

வெளியாகியுள்ள டிரெய்லர், ஒரு சாதாரணக் குடியிருப்புப் பகுதி எவ்வாறு மர்மத்தின் மையமாக மாறுகிறது என்பதை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் சூழ்நிலை சார்ந்த நகைச்சுவையையும் இணைத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான குணாதிசயங்களையும் சந்தேகங்களையும் அறிமுகப்படுத்துகிறது. உண்மையைக் கண்டறிய குடியிருப்புவாசிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்பாராத சம்பவங்களுக்கு வழிவகுப்பதால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமான புலனாய்வுத் த்ரில்லர்களில் காவல்துறை அதிகாரிகள் அல்லது தொழில்முறை துப்பறிவாளர்கள் விசாரணை நடத்துவார்கள். ஆனால், ‘ஆக்டோபஸ்’ தொடரில் சாதாரண மனிதர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும் என்பதை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. மர்மத்துடன் மனித உறவுகள், உணர்வுகள் மற்றும் நகைச்சுவையையும் இணைத்து, சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைக்கு வித்தியாசமான அணுகுமுறையை இந்தத் தொடர் வழங்குகிறது.

எழுத்தாளரும் இயக்குநருமான ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள இத்தொடரை சினிமம் ஃபிலிம் ஹவுஸ் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அர்ச்சனா ரவிச்சந்திரன், அஷ்வின், வினோத் கிஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சித்து குமரேசன், கொடங்கி வடிவேலு, பகவதி பெருமாள், சரித்திரன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரின் மூலம் அர்ச்சனா ரவிச்சந்திரன் முதன்முறையாக முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

தொடர் குறித்து ZEE5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறுகையில், ‘ஆக்டோபஸ்’ தொடரின் அறிமுகப் ப்ரோமோவுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். ஒரு மர்மமான காணாமல் போன சம்பவத்தின் மையத்தில் ஒட்டுமொத்த குடியிருப்புப் பகுதியையும் கொண்டு வருவதன் மூலம் இந்தத் தொடர் புதிய கண்ணோட்டத்தை வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், சுவாரஸ்யமான கதைக்களம், ரசிகர்களுடன் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவையின் கலவை என நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும் தொடர் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தைத் தரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கூறுகையில், கொரோனா ஊரடங்கின்போது ‘ஆக்டோபஸ்’ தொடருக்கான யோசனை உருவானதாகத் தெரிவித்தார். அக்காலகட்டத்தில் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அமைந்த குடியிருப்புப் பகுதிகளில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையின் கரு உருவானதாகக் குறிப்பிட்டார். ஒரு நெருக்கமான குடியிருப்புப் பகுதிக்கு வரும் இளம் தம்பதியின் வாழ்க்கையில், அந்த இளம் பெண் மர்மமான முறையில் காணாமல் போகும்போது, அவரைத் தேடும் குடியிருப்புவாசிகளின் முயற்சி பல்வேறு திசைகளில் விரிவடைகிறது என்றார். ஆக்டோபஸின் கரங்கள் பல திசைகளில் விரிவடைவதைப் போலவே இந்தத் தேடலும் பல கோணங்களில் பயணிப்பதால் தொடருக்கு ‘ஆக்டோபஸ்’ எனப் பெயரிட்டதாக விளக்கினார். மனித உறவுகள், மனித மனதின் மறைக்கப்பட்ட அடுக்குகள் மற்றும் குடும்பம் எனக் கருதுபவர்களுக்காக மனிதர்கள் எந்த எல்லை வரை செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் இந்தத் தொடர் ஆராய்வதாகத் தெரிவித்தார்.

சினிமம் ஃபிலிம் ஹவுஸ் தயாரிப்பாளர்களான லிஷா பி. சந்திரன் மற்றும் ஆதித்யா ஜே. ராஜு கூறுகையில், புதிய படைப்பாளர்களையும் வழக்கத்திற்கு மாறான கதைகளையும் ஊக்குவிப்பதில் தங்கள் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஜெயச்சந்திர ஹாஷ்மி சுவாரஸ்யமான கதையை உருவாக்கியுள்ளதாகவும், திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து அதற்கு உயிரூட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த ZEE5 நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அர்ச்சனா ரவிச்சந்திரன், ‘ஆக்டோபஸ்’ தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான படைப்பு என்றும், முதன்முறையாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மர்மமான காணாமல் போன சம்பவம் ஒட்டுமொத்த குடியிருப்புப் பகுதி மக்களையும் ஒன்றிணைப்பது கதையில் தன்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்றார். சஸ்பென்ஸைக் கடந்து நம்பிக்கை, உறவுகள் மற்றும் உண்மையைக் கண்டறிவதற்கான உறுதியான முயற்சி ஆகியவற்றையும் தொடர் ஆராய்வதாகக் குறிப்பிட்டார்.

நடிகர் அஷ்வின் பேசுகையில், ஒரு தம்பதியின் உலகத்திலிருந்து ஒட்டுமொத்த குடியிருப்புப் பகுதியின் உறவுகள் மற்றும் நிகழ்வுகளாகக் கதை விரிவடையும் விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார். வலுவான திரைக்கதை, கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான உரையாடல்கள் தொடரை சுவாரஸ்யமாக்குவதாகவும், பார்வையாளர்கள் இதை ஆர்வத்துடன் ரசிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மர்மமான காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு குடியிருப்புப் பகுதி மக்களே துப்பறிவாளர்களாக மாறும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘ஆக்டோபஸ்’ வெப் சீரிஸ், வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஏழு எபிசோடுகளாக வெளியாகிறது.