மருத்துவம் என்பது உயிர்களைக் காக்கும் உன்னதமான சேவை. ஆனால், அந்தத் துறையிலும் அதிகாரம், பணம் மற்றும் சுயநலம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பதைப் பரபரப்பான கிரைம் திரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘நிறம்’.
முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ளது. பல பெண்கள் அடுத்தடுத்து காணாமல் போகும் சம்பவங்கள் காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக மாறுகின்றன. காணாமல் போனவர்களுக்கும் ஒரு மருத்துவமனைக்கும் இடையே இருக்கும் தொடர்பைக் கண்டறியும் முயற்சியில் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
மருத்துவ மாணவரான கீர்த்தனா (ப்ரீத்தி அஸ்ரானி), சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தனது செல்போன் மூலம் வீடியோவாகப் பதிவு செய்து தட்டிக்கேட்கும் துணிச்சலான பெண். சக மாணவரான கிரிஷ் (முகேன் ராவ்) அவரைக் காதலிக்கிறார். மருத்துவமனையில் நடைபெறும் ஒரு சம்பவத்தைப் பதிவு செய்து கேள்வி எழுப்பும் கீர்த்தனா, அதன் காரணமாகப் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார். இதற்கிடையே அவர் திடீரெனக் காணாமல் போக, அவரைத் தேடும் முயற்சியில் கிரிஷ் இறங்குகிறார். அதேவேளையில், மற்றொரு பெண்ணான மஹாவும் காணாமல் போகிறார். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு, காணாமல் போன பெண்களின் நிலை என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
கிரைம் திரில்லர் கதைக்குள் மருத்துவத் துறையில் நிலவும் சில தவறான நடைமுறைகள், அதிகார துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள், சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதன் அவசியம் எனப் பல விஷயங்களை இயக்குநர் இணைத்திருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது. உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கதைக்களம் என்பதால், படத்தின் சில சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகின்றன.
கிரிஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள முகேன் ராவ், காதல், விசாரணை மற்றும் ஆக்ஷன் என வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். குறிப்பாக, காணாமல் போன காதலியைத் தேடும் காட்சிகளிலும், அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கீர்த்தனாவாக நடித்துள்ள ப்ரீத்தி அஸ்ரானி படத்தின் முக்கியமான பலமாகத் திகழ்கிறார். துணிச்சலான, அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்ணாக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருப்பதும், அதற்கேற்ற நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.
மஹா கதாபாத்திரத்தில் தான்யா ஹோப் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார். வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நிதின் சத்யா தனது அனுபவமான நடிப்பால் கவனம் பெறுகிறார். மருத்துவமனை நிர்வாகியாக வரும் சுரேகா வாணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஸ்ரீஜித் ரவி, திருநாவுக்கரசு, கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் கதையின் போக்கிற்கு வலுசேர்த்துள்ளனர்.
படத்தின் திரைக்கதையில் நேர்கோட்டில் செல்லாமல், வெவ்வேறு சம்பவங்களை ஒன்றோடொன்று இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நான்-லீனியர் கதை சொல்லும் முறை சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும்போது கதையின் வேகம் அதிகரிக்கிறது. காணாமல் போன பெண்களின் பின்னணியும், மருத்துவமனையைச் சுற்றியுள்ள மர்மங்களும் ஒன்றிணையும் விதம் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்கிறது.
டி. இமானின் இசை படத்தின் உணர்வுபூர்வமான தருணங்களுக்கும் திரில்லர் காட்சிகளுக்கும் துணையாக அமைந்துள்ளது. சந்தோனியோ டெர்சியோவின் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு, தாமோதரனின் கலை இயக்கம் ஆகியவை படத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்குப் பங்களித்துள்ளன.
அதேநேரத்தில், சில காட்சிகளின் தொடர்ச்சியிலும், கதையின் சில திருப்பங்களுக்கான விளக்கங்களிலும் கூடுதல் தெளிவு இருந்திருக்கலாம். முதல் பாதியில் சில இடங்களில் திரைக்கதை சற்றுத் தடுமாறினாலும், பின்னர் கதை வேகம் பெறுகிறது. சில சம்பவங்கள் இன்னும் அழுத்தமாகவும் நம்பகத்தன்மையுடனும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் படத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திருக்கும்.
மொத்தத்தில், மருத்துவ உலகின் பின்னணியில் பெண்கள் காணாமல் போகும் மர்மத்தை வைத்து, சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களையும் சுவாரஸ்யமான திரில்லர் கதையையும் இணைத்துக் கொடுத்திருக்கும் திரைப்படம் ‘நிறம்’. முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு, சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. சில திரைக்கதை குறைகள் இருந்தாலும், பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ‘நிறம்’ ஒரு சுவாரஸ்யமான திரையனுபவமாக அமையும்.
நிறம் – மருத்துவ உலகின் மறுபக்கத்தைப் பேசும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர்!
ரேட்டிங் – 3/5