ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
நவம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில், “தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில், ”இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.
இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில், ”சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். ‘பவுடர்’ படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய ‘ஹரா’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது ‘ஹரா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.
படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.
‘பிக்பாஸ்’ பிரபலம் நடிகர் சிபி பேசுகையில், ”இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகர் விஷ்ணு பேசுகையில், ”இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய ‘ட்ரேட்மார்க்’ சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர்.
இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், ”என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார். நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் ‘செல்லாட்டி..’ என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. ‘தென்மேற்கு பருவக்காற்று ‘ படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார்.
இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. உச்சகட்ட காட்சியை பார்த்துவிட்டு நீங்களே அது தொடர்பாக பேசுவீர்கள். இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. ‘அயோத்தி’ படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். இதற்கும் ஊடகங்கள் பேராதரவு தெரிவிக்க வேண்டும்.
நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,” என்றார்.
நடிகை பிரதீபா பேசுகையில், ” கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. ‘நீர்ப்பறவைசி படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.
கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் ‘பருத்திவீரன்’, ‘