‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திற்கு கனிமொழி எம்.பி. பாராட்டு… சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் திரைப்படம்!

3

திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’திரைப்படத்திற்கு தற்போது மேலும் ஒரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து, படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

திரைப்படம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தை பொறுப்புணர்வுடன் திரையில் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட கனிமொழி, படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுபூர்வமான இயக்கம் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவை தன்னை வெகுவாக கவர்ந்ததாக தெரிவித்தார். இப்படம் பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் மட்டுமல்லாமல், சமூகத்தில் சிந்திக்கத் தூண்டும் விவாதங்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

திரையிடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும்” என்று வாழ்த்துத் தெரிவித்தார்.

இதற்கிடையில், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் தணிக்கைக் குழுவின் ‘U/A’ சான்றிதழையும் பெற்றுள்ளது. இதன் மூலம் படம் திரையரங்கு வெளியீட்டிற்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை தயாள் பத்மநாபன்இயக்கியுள்ளார். வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தமிழக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உண்மை குற்றச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்ட விறுவிறுப்பான கோர்ட்ரூம் க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பாராட்டும், தணிக்கைக் குழுவின் ‘U/A’ சான்றிதழும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ள நிலையில், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் வரும் ஜூலை 10 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.