ZEE5-ல் ஜூலை 10 முதல் ஸ்ட்ரீமாகும் பாண்டிராஜின் ‘பரிமளா & கோ’… குடும்ப நகைச்சுவை–மர்மம் கலந்த விருந்து!

2

இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள ‘பரிமளா & கோ’ திரைப்படம், வரும் ஜூலை 10 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது. குடும்ப நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 வெளியிடும் இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பசங்கா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜெயராம், ஊர்வசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பரிமளா & கோ’, எதிர்பாராத விதமாக ஒரு கொலை மர்ம விசாரணையில் சிக்கிக்கொள்ளும் சாதாரண குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சந்தேகங்கள் அதிகரித்து, மறைந்திருந்த ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படும் சூழலில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ச்சியான நகைச்சுவையான தவறான புரிதல்களிலும் எதிர்பாராத திருப்பங்களிலும் சிக்கிக்கொள்கின்றனர். குடும்ப பாசம், நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் ஆகிய மூன்றையும் பாண்டிராஜ் தனது வழக்கமான பாணியில் இணைத்திருப்பதால், இப்படம் அனைத்து வயதினருக்கும் முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் வெளியீடு குறித்து ZEE5 தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ், மலையாளம் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறுகையில், “மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி குடும்பங்களை இணைக்கும் கதைகளை வழங்குவதில் ZEE5 தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. நகைச்சுவை, உணர்வு மற்றும் மர்மம் ஆகியவற்றை புத்துணர்ச்சியூட்டும் வகையில் இணைத்துள்ள ‘பரிமளா & கோ’, அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். ஜெயராம், ஊர்வசி தலைமையிலான சிறப்பான நட்சத்திர பட்டாளமும், பாண்டிராஜின் தனித்துவமான கதை சொல்லலும் இணைந்துள்ள இந்தப் படத்தை ஐந்து மொழிகளில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு Foxn இசையமைத்துள்ளார். பிரதீப் இ. ராகவ்படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், டி. ராமலிங்கம் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.

குடும்ப உறவுகள், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, விறுவிறுப்பான மர்மம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘பரிமளா & கோ’, வரும் ஜூலை 10 முதல் ZEE5-ல் ஐந்து மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகிறது.