பாசக்கார அமைச்சர்… அமைச்சர் வெங்கட்ரமணனை சந்தித்த இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி!

37

விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’ மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘நாகா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனை சந்தித்ததைத் தொடர்ந்து, அவரது எளிமை மற்றும் பாசமான அணுகுமுறையைப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள சுரேஷ், இயக்குநர் எஸ்.ஏ.சி. இயக்கத்தில் உருவான ‘ரசிகன்’, ‘மாண்புமிகு மாணவன்’, ‘ஹரிதாஸ்’, ‘வட்டக்கானல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்த ஆர்.கே. வரதராஜுடன் இணைந்து சமீபத்தில் அமைச்சர் வெங்கட்ரமணனை சந்தித்தார்.

இதுகுறித்து இயக்குநர் சுரேஷ் கூறியதாவது:

“நாங்களிருவரும் எஸ்.ஏ. சந்திரசேகர் சாரின் பயிற்சிப் பட்டறையில் உருவானவர்கள். ஆரம்ப காலத்திலிருந்தே எங்கள் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து பயணித்தவர் அமைச்சர் வெங்கட்ரமணன். அதனால் அவருடன் எங்களுக்கு நீண்ட நாள் நட்பும் நல்ல புரிதலும் இருந்தது.

தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும், எங்களைப் பார்த்தவுடன் பழைய பாசத்துடனும் அன்புடனும் பேசினார். எந்தவித மாற்றமும் இல்லாமல் எளிமையாக பழகியது எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அவரது அமைதி, எளிமை மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அவரை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார்.

அமைச்சர் வெங்கட்ரமணனுடன் இயக்குநர் சுரேஷ் மற்றும் நடிகர் ஆர்.கே. வரதராஜ் சந்தித்து கலந்துரையாடிய இந்த சந்திப்பு, பழைய நட்பையும் சினிமா உலக உறவுகளையும் மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தது.