‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு கதாநாயகனாக அடுத்த கட்டம் நோக்கி ஈசா; “எனக்குக் கிடைத்த அங்கீகாரம் அனைத்திற்கும் காரணம் இயக்குநர் மீரா கதிரவன்” என நெகிழ்ச்சி

12

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வரும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ள இளம் நடிகர் ஈசா, தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெற்றிக்குப் பிறகு தனது திரைப்பயணம், அனுபவங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர் மட்டுமல்லாமல், தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரரும் ஆவார். விளையாட்டின் மூலம் கற்றுக்கொண்ட ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியே தனது திரைப்பயணத்திற்கும் அடித்தளமாக அமைந்ததாக அவர் கூறுகிறார்.

திரைப்படத் துறையில் தனது பயணத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில், நடிகர் அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதன் மூலம் தொடங்கிய ஈசா, அந்த அனுபவம் சினிமாவின் நுணுக்கங்களை புரிந்துகொள்ள உதவியதாக நினைவுகூர்ந்தார்.

பின்னர் இயக்குநர் அஸ்லம் மூலம் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கான நடிகர் தேர்வு நடைபெறுவதை அறிந்து ஆடிஷனில் பங்கேற்றார். ஆறு மாதங்களுக்குப் பிறகு ரிகர்சலுக்கு அழைப்பு வந்தபோதுதான் கதாநாயகனாக தேர்வாகியிருப்பதை அறிந்ததாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு தொடர்ச்சியான நடிப்பு பயிற்சிகள், ஒர்க்ஷாப்கள் மற்றும் ரிகர்சல்கள் மூலம் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.

‘ஹபீபி’ திரைப்படத்தில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வரும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஈசா, அதற்காக தனது உடல் எடையை பலமுறை மாற்றியுள்ளார். கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப உடல் எடையைக் குறைத்து, பின்னர் சுமார் 20 கிலோ வரை அதிகரித்து, மீண்டும் குறைத்து நடித்தது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என அவர் தெரிவித்தார்.

படத்தில் இணைந்து நடித்த கஸ்தூரிராஜா மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோரின் ஒத்துழைப்பு தனது நடிப்பை மேலும் இயல்பாக்க உதவியதாகவும் ஈசா குறிப்பிட்டார்.

இப்படத்தின் சிறப்புக் காட்சிகளைப் பார்த்த மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, பாலாஜி சக்திவேல், அமீர், சேரன், சசிகுமார், வெற்றிமாறன், மிஷ்கின், சீனு ராமசாமி, கே. பாக்யராஜ், மகிழ் திருமேனி, சுசீந்திரன், நாசர், பி.சி. ஸ்ரீராம், பாண்டிராஜ், பா. ரஞ்சித், ராம், தங்கர் பச்சான், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவரது நடிப்பை மனதார பாராட்டியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

தனது வெற்றிக்கான காரணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய ஈசா, “‘ஹபீபி’ திரைப்படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த அத்தனை அங்கீகாரத்திற்கும், பாராட்டுகளுக்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான். ஒரு புதுமுக நடிகரை நம்பி இவ்வளவு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்து, என்னுள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தவர் அவர்தான். இந்த வெற்றியின் முழுப் பெருமையும் அவருக்கே சேரும். இனி நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என் மிகப்பெரிய பொறுப்பு,” என்று தெரிவித்தார்.

‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ள ஈசா, அந்த படங்கள் வணிக அம்சங்களுடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளையும் பேசும் படைப்புகளாக இருக்கும் என்றும், அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.

மேலும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் தரமான திரைப்படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே போதுமான ஆதரவு கிடைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், நல்ல கதைகள் மற்றும் நல்ல கதாபாத்திரங்களே தனது அடுத்தடுத்த பயணத்தின் முக்கிய இலக்காக இருக்கும் என்றும், நடிகராக மட்டுமல்லாமல் விளையாட்டு வீரராகவும் தொடர்ந்து அறியப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.