இந்தியாவில் முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பத்தில் உருவாகும் முழுநீள திரைப்படம் ‘அவிரா’

27

திரைப்படத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை உருவாக்கும் முயற்சியாக முழுக்க முழுக்க Photo Realistic AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகியுள்ள முழுநீள திரைப்படமான ‘அவிரா’ அறிமுகமாகியுள்ளது.

விளம்பரத் திரைப்பட இயக்குநராக 70-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயக்கியுள்ள பிரபாகரன், இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, முழுமையாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயக்கியுள்ளார். லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுநீள திரைப்படத்தை உருவாக்கியிருப்பது இந்தப் படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். வழக்கமான படப்பிடிப்பு முறைகளிலிருந்து விலகி, AI தொழில்நுட்பத்தின் மூலம் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் உயிர்ப்புடன் உருவாக்கியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் பிரபாகரன் கூறுகையில், “அவிரா என்றால் ‘பிரபஞ்சத்தின் பேரொளி’ என்று பொருள். புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனை உலகத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். Photo Realistic AI தொழில்நுட்பத்தின் மூலம் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையிலான பேண்டஸி திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.

மேலும், பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘அவிரா’ தற்போது இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

AI தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக உருவாகி வரும் ‘அவிரா’, இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய தொழில்நுட்ப மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.