‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்; சத்யஜோதி பிலிம்ஸ் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்!

11

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் இரண்டு முக்கிய தேசிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும், படத்தில் தனது ஆழமான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு ‘Special Mention’ தேசிய அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஏழு தசாப்தங்களாக நீடித்து வரும் தரமான திரைப்படப் பாரம்பரியத்திற்கு கிடைத்த மேலும் ஒரு உயரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகின்றன. மூன்று தலைமுறைகளாக அர்த்தமுள்ள கதைகள் மற்றும் கலைநயம் மிக்க திரைப்படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம், தேசிய விருதுகளின் வரலாற்றிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸின் தேசிய விருது பயணம், வீனஸ் டி. கோவிந்தராஜன் தயாரித்த ‘கல்யாண பரிசு’ திரைப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதன் மூலம் தொடங்கியது. பின்னர் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து டி.ஜி. தியாகராஜன் தயாரித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று, கமல்ஹாசனின் முதல் தேசிய விருதுக்கும் காரணமாக அமைந்தது.

தற்போது மூன்றாம் தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தலைமையில் இயங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸ், தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதற்கு முன்பு ‘விஸ்வாசம்’ திரைப்படம் தேசிய விருதைப் பெற்ற நிலையில், தற்போது ‘கேப்டன் மில்லர்’ இரண்டு தேசிய விருதுகளை வென்று நிறுவனத்தின் சாதனைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை பதித்துள்ளது.

இந்த வெற்றிக்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், தனது சிறப்பான நடிப்பிற்காக தேசிய அளவில் ‘Special Mention’ அங்கீகாரம் பெற்ற தனுஷுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

ஏழு தசாப்தங்களாக தரமான கதைகளையும் சமூகப் பொறுப்புணர்வுமிக்க திரைப்படங்களையும் வழங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பெற்றுள்ள இந்த இரண்டு தேசிய விருதுகள், அதன் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.