‘ராமாயணம்’ உலகப் பயணத்தை தொடங்கிய நமித் மல்ஹோத்ரா; டெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வு!
இந்தியாவின் மகத்தான இதிகாசமான ‘ராமாயணம்’ திரைப்படத்தின் உலகளாவிய பயணத்தை தொடங்கி வைக்கும் வகையில், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னெடுத்த ‘பிரதம் சங்கல்ப்’ (Pratham Sankalp) என்ற பிரத்யேக அறிமுக நிகழ்வு, புது டெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் ஜூலை 24 அன்று வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ டிரெய்லருக்கு முன்னதாக நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்திய கலாச்சார பாரம்பரியத்தை உலக அரங்கில் கொண்டுசெல்லும் புதிய அத்தியாயமாக அமைந்தது.
இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தையும், ராமாயணம் வழங்கும் வாழ்க்கை நெறிகளையும் உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் முதல் முறையாக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. மேலும், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற ‘ராமாயணம் ஸ்கூல்ஸ் புரோகிராம்’ மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தியாவின் 20 நகரங்களில் இருந்து குழந்தைகள், படைப்பாளிகள் மற்றும் ரசிகர்களும் டிரெய்லரை முன்கூட்டியே பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.
இந்த நிகழ்வில், இயக்குநர் நிதேஷ் திவாரி, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா உள்ளிட்ட படக்குழுவினருடன், ரன்பீர் கபூர் (ராமர்), சாய் பல்லவி (சீதா), யாஷ் (ராவணன்), சன்னி தியோல் (அனுமன்), அருண் கோவில் (தசரதர்), ஷோபனா (கைகேயி), அஜிங்க்யா தேவ் (விஸ்வாமித்திரர்), குனால் கபூர் (இந்திரன்), ரகுல் ப்ரீத் சிங் (சூர்ப்பணகை), ரவி துபே (லட்சுமணன்) உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் படைப்பாக்க வடிவமைப்பாளர் நமித் மல்ஹோத்ரா, “ராமாயணம் ஒரு இதிகாசம் மட்டுமல்ல; அது நமது வாழ்வின் ஒரு பகுதியாகும். உலக திரைப்படத் துறையில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம், இந்தியாவின் மகத்தான கதைகள் உலகின் மிகப்பெரிய மேடையில் சொல்லப்பட வேண்டும் என்ற கனவு எப்போதும் இருந்தது. அந்த கனவு இன்று நனவாகத் தொடங்கியுள்ளது. இது ஒரு திரைப்படத்தின் தொடக்கம் மட்டுமல்ல; இந்தியாவின் கலாச்சாரப் பெருமையை உலகத்துடன் பகிரும் புதிய பயணம்” என்றார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி பேசுகையில், “ராமாயணத்தை உலகளாவிய கதையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே உலக மக்களின் இதயங்களில் இடம்பிடித்த காவியம். அதை உண்மைத்தன்மை, நேர்மை மற்றும் மரியாதையுடன் திரையில் கொண்டு வருவதே எங்கள் பொறுப்பு. உலகின் தலைசிறந்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படம், ராமாயணத்தின் உணர்வுகளையும் மனிதாபிமானத்தையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும்” என்று தெரிவித்தார்.
பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது பெற்ற DNEG மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படைப்புக்கு, ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.
‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார காவியத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாக இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.