நயன்தாரா – கவின் இணைந்த ‘ஹாய்’… வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

13

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இளம் நட்சத்திரம் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பிரத்யேக அறிவிப்பு காணொளியையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி.டி.வி. கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ்படத்தொகுப்பையும், எஸ். கண்ணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

குடும்பங்கள் ஒன்றாக ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த ஃபேமிலி என்டர்டெய்னரை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக அறிவிப்பு காணொளி மூலம் ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில், “‘ஹாய்’ திரைப்படம் அதன் தலைப்பைப் போலவே எளிமையான, இனிமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று இடங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்துடன் இரண்டே கால் மணி நேரம் மகிழ்ச்சியாக ரசிக்கும் அனுபவத்தை இப்படம் வழங்கும்,” என்றார்.

மேலும், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற வெற்றிப் படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவனின் இயக்கத்தில் உருவாகியிருப்பதும், நயன்தாரா – கவின் முதல் முறையாக இணைந்திருப்பதும், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருப்பதும் ‘ஹாய்’திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மேலும் அதிகரித்துள்ளது.