தமிழ் சுயாதீன இசைக் கலைஞர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய இசை ரியாலிட்டி தொடரான ‘I-POPSTAR Tamil’-ஐ, Rusk Media-வின் OTT தளமான ‘Alright! TV’ அறிமுகப்படுத்தியுள்ளது. அசல் தமிழ் இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, தமிழகம் முழுவதும் உள்ள புதிய இசைத் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேசிய அளவிலான மேடையை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சுயாதீன இசை (Indie Music) பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. வீட்டிலிருந்தே இசையமைக்கும் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், ராப்பர்கள் மற்றும் மேடைக் கலைஞர்கள் என புதிய தலைமுறை இசைப் படைப்பாளர்கள் தமிழ் இசையின் புதிய முகமாக உருவெடுத்து வருகின்றனர். இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே ‘I-POPSTAR Tamil’ உருவாகியுள்ளது.
ஜூலை 23 முதல் தொடங்கும் இந்த ரியாலிட்டி தொடர், Alright! TV தளத்தில் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், Media Masons யூடியூப் சேனலில் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும்ஒளிபரப்பாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள புதிய திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதோடு, வளர்ந்து வரும் தமிழ் சுயாதீன இசை உலகத்தை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியின் ‘சூப்பர் மென்டராக’ பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். அவருடன் முன்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், ராப்பர் அசல் கோலார், பாடகர் மற்றும் பாடலாசிரியர் அந்தோணி தாசன்ஆகியோர் மென்டர்களாக இணைந்து, போட்டியாளர்களின் அணிகளுக்கு முழு போட்டிக்காலத்திலும் வழிகாட்ட உள்ளனர்.
தொலைக்காட்சி ஆளுமை முகமது குரைஷி மற்றும் பாடகர் சாம் விஷால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இசையமைப்பாளர் சத்யா பிரகாஷ் நிகழ்ச்சியின் இசை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
பின்னணிப் பாடல்களை மட்டுமே மையமாகக் கொண்ட வழக்கமான இசைப் போட்டிகளிலிருந்து மாறுபட்டு, ‘I-POPSTAR Tamil’ முழுக்க முழுக்க அசல் இசைப் படைப்புகளையும், படைப்பாற்றலையும் முன்னிறுத்துகிறது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு தேர்வு செய்யப்படும் 12 போட்டியாளர்கள், தலா நான்கு பேர் கொண்ட மூன்று அணிகளாகபிரிக்கப்படுவார்கள். மொத்தம் 14 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது இசைத் திறமை, தனித்துவமான பாணி மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு ஆக்கப்பூர்வமான சவால்களை எதிர்கொள்வார்கள். இறுதியில் ஒருவருக்கு ‘I-POPSTAR Tamil’ பட்டம் வழங்கப்படும்.
Rusk Media நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியும் இணை நிறுவனருமான சாந்தனு சிங் கூறுகையில், “திரைப்பட இசைக்கு அப்பால், அசல் இசையையும் அதை உருவாக்கும் திறமையான கலைஞர்களையும் கொண்டாடும் ஒரு மேடைக்காக தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்தனர். அதற்கான பதில்தான் ‘I-POPSTAR Tamil’. கலைஞர்கள் தங்கள் தனித்துவமான இசைப் பாணியை இழக்காமல் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தமிழ் இசையின் அடுத்த தலைமுறையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமையும். பல புதிய கலைஞர்களின் இசைப் பயணத்திற்கு இது ஒரு முக்கிய தொடக்கமாக இருக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
சூப்பர் மென்டரான யுவன் சங்கர் ராஜா பேசுகையில், “இன்று மிகவும் சுவாரஸ்யமான இசை, புதிய முயற்சிகளை மேற்கொண்டு தங்களது கதைகளை தங்களது சொந்த பாணியில் சொல்ல விரும்பும் சுயாதீன இசைக் கலைஞர்களிடமிருந்தே வருகிறது. ‘I-POPSTAR Tamil’ புதிய திறமைகளை கண்டறிந்து, அவர்கள் தங்களது தனித்துவத்தை பாதுகாத்தபடி வளர்ச்சியடைய ஊக்குவிக்கும் ஒரு சிறந்த மேடையாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகமது குரைஷி கூறுகையில், “‘I-POPSTAR Tamil’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவம். சென்னையின் சுயாதீன இசை உலகம் சிறிய மேடைகளில் இருந்து இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளாக வளர்ந்திருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அந்தக் கலைஞர்களுக்கு இன்னும் பெரிய பார்வையாளர்களை இந்த நிகழ்ச்சி உருவாக்கித் தரும். புதிய இசைக் குரல்கள் உருவாகுவதைக் காண ஆவலாக இருக்கிறேன்,” என்றார்.
மற்றொரு தொகுப்பாளரான சாம் விஷால் கூறுகையில், “தமிழ் சுயாதீன இசையில் இன்னும் கண்டறியப்படாத ஏராளமான திறமைகள் உள்ளன. அந்தக் கலைஞர்களுக்குத் தகுதியான மேடையை ‘I-POPSTAR Tamil’ வழங்குகிறது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்துவமான ஒரு இசைப் பயணம் உள்ளது. அந்தப் பயணத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிணைவார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியை AI+ Nova Smartphone வழங்குகிறது. Farmley Makha Shaka, Godrej Appliances மற்றும் Denver Perfumes ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆதரவு வழங்குகின்றன. இதில் Godrej Appliances தரத்திற்கான கூட்டாளராகவும் (Quality Partner), Denver Perfumes நறுமண கூட்டாளராகவும் (Fragrance Partner) இணைந்துள்ளன.
ஜூலை 23 முதல் தொடங்கும் ‘I-POPSTAR Tamil’, தமிழ் சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு புதிய அடையாளத்தையும், அவர்களின் அசல் இசைப் படைப்புகளை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் முக்கிய மேடையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
