‘ஹாய்’ படத்தின் ‘ரசகுல்லா’ பாடல் வெளியீடு… நயன்தாரா–கவின் கெமிஸ்ட்ரியால் இணையத்தில் ட்ரெண்டாகும் புதிய மெலடி!

24

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா…’ மற்றும் அதன் காணொளி தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மெலோடியான இசை, வண்ணமயமான காட்சியமைப்பு மற்றும் நயன்தாரா–கவின் இடையேயான திரைவேதியியல் (Screen Chemistry) ஆகியவை இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கியுள்ளன.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை கவனித்துள்ள நிலையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

குடும்பங்கள் ஒன்றாகக் கண்டு ரசிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஹாய்’படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ். லலித்குமார் ஆகியோர் தயாரிப்பாளர்களாகவும், வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கு முன்பு வெளியான ‘கன்னக் குழியா…’ பாடல் ஏறத்தாழ 3 மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘ரசகுல்லா…’ பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் பாடலுக்கு படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் வரிகள் எழுதியுள்ள நிலையில், அனிருத் தனது குரலில் பாடியுள்ளார். பிருந்தா மாஸ்டர் நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலில், ஜென் மார்ட்டினின் மென்மையான மெலடி, ‘ரசகுல்லா’ என்ற இனிமையான வார்த்தையை மையமாகக் கொண்ட பாடல் வரிகள், நயன்தாராவின் கலர்ஃபுல் தோற்றம், கவினின் கம்பீரமான திரைநிகழ்வு மற்றும் இருவரின் இயல்பான காதல் கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

காதல், இசை மற்றும் காட்சியமைப்பு ஆகிய மூன்றின் கலவையாக உருவாகியுள்ள ‘ரசகுல்லா…’ பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ‘ஹாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.