அக்.1-ல் திரைக்கு வரும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’… நிவின் பாலி – சூரி கூட்டணியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

18

இயக்குநர் ராமின் இயக்கத்தில், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் படத்தின் புதிய டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரிநடித்துள்ளார். சமீப காலமாக கதையின் நாயகனாக வலம் வரும் சூரி, இந்தப் படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் ரசிகர்களை சந்திக்கிறார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.

இயக்குநர் ராமின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். ராம் – யுவன் கூட்டணியின் மற்றொரு உணர்வுபூர்வமான படைப்பாக ‘ஏழு கடல் ஏழு மலை’ உருவாகியுள்ளது.

ரிலீஸ் அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள டீசர், படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதில் நிவின் பாலியின் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பு கவனம் ஈர்க்கும் நிலையில், சூரியின் ஸ்டைலிஷ் லுக்கும் அவரது கதாபாத்திரமும் புதிய எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக ரயில் பயணத்தை மையமாகக் கொண்ட காட்சிகள், இயக்குநர் ராம் இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லப் போகிறார் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

அதேநேரத்தில், சமீப ஆண்டுகளில் சீரியஸான கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்த சூரியை, மீண்டும் அவரது இயல்பான நகைச்சுவை பாணியில் பார்க்கும் வாய்ப்பும் இந்தப் படத்தில் இருப்பதை டீசர் சுட்டிக்காட்டுகிறது.

படம் ஏற்கனவே தயாராகி இருந்தாலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல பிரிவுகளில் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த சர்வதேச அங்கீகாரங்களுடன் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க தயாராகியுள்ளது.