திரையரங்குகளை இசை மேடையாக்க வரும் ‘மீசைய முறுக்கு 2’; செப். 25 ரிலீஸ்

20

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பிலும், இயக்கத்திலும் உருவாகியுள்ள ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கை ஒருங்கே இணைக்கும் இந்த திரைப்படம், செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த அறிவிப்பு, 2017-ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்களின் மனதில் தனி இடம்பிடித்த ‘மீசைய முறுக்கு’திரைப்படத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியாகியுள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் ஹிப்ஹாப் தமிழா ஆதியை அறிமுகப்படுத்திய அந்தப் படம், இளைய தலைமுறையின் கனவுகள், காதல், இசை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லியதுடன், அதன் பாடல்கள் மற்றும் திரைக்கதையால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வணிக ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த முக்கியமான தருணத்தை நினைவுகூர்ந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, “ஒரு கனவாகத் தொடங்கியது, இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது. அந்த மாயாஜாலத்தை மீண்டும் ஒருமுறை ‘மீசைய முறுக்கு 2’ மூலம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு வெளியாகியதைத் தொடர்ந்து, படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ள மற்றொரு முக்கிய அம்சம் அதன் இசை. ஏற்கனவே வெளியாகியுள்ள ‘Aura 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களிலும், இசை தளங்களிலும் வைரலாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

முதல் பாகத்தைப் போலவே, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசையமைப்பு மற்றும் கதாநாயகன் என பல்வேறு பொறுப்புகளை ஹிப்ஹாப் தமிழா ஆதி மீண்டும் ஏற்றுள்ளார். இளமைக் காதல், நட்பு, குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உற்சாகமான இசை என அனைத்து அம்சங்களையும் இணைத்து, முதல் பாகத்தின் இளமைத் துடிப்பையும் கலாச்சார தாக்கத்தையும் தொடரும் வகையில் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படைப்பாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுடன் சைத்ரா J ஆச்சார், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை குஷ்பூ சுந்தர்மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ளனர். பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, பென்னி ஒலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். கூடுதல் ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார்.

படத்தின் கலை இயக்கத்தை வி.எஸ். தினேஷ்குமார், ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி, நடன அமைப்பை பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா, சண்டைப் பயிற்சியை ஆக்ஷன் சந்தோஷ் கவனித்துள்ளனர். ஒலிக்கலவையை கண்ணன் கணபத், ஒலி வடிவமைப்பை ஏ. சதீஷ்குமார், DI பணிகளை Knack Studios, VFX பணிகளை 85FX மற்றும் Hocus Pocus நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

மேலும் ஆர். மதன் குமார் (CEO – Benz Media), ஆனந்திதா சுந்தர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அஸ்வின் ராம்(கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), ஹரி வெங்கட் C (புரொடக்ஷன் கண்ட்ரோலர்), விக்னேஷ் ரத்தினம் (புரொடக்ஷன் மேனேஜர்) உள்ளிட்டோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் பாகத்தைப் போலவே இசையையும், இளமையையும், பொழுதுபோக்கையும் கொண்டாடும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.