சூர்யா குரலில் வெளியான ‘தி வெட்டிங் சாங்’… ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு!
சூர்யா – மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘தி வெட்டிங் சாங்’ (The Wedding Song) தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான ‘பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை’ பாடல் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய பாடலும் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக பேசப்பட்டு வருகிறது.
முழுக்க முழுக்க திருமண விழாவின் கொண்டாட்ட மனநிலை, குடும்ப பாசம் மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு இருவரும் தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். பிரம்மாண்டமான குடும்பத் திருமண விழாவின் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் இயல்பாக வெளிப்படுத்தும் வகையில் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாடலின் சிறப்பம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் இந்தப் பாடலைப் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் துள்ளலான இசையால் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதிய வரிகள், குடும்ப உறவுகளின் மகிழ்ச்சியையும் திருமண விழாவின் கொண்டாட்ட உணர்வையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.
முன்னதாக வெளியான ‘பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘தி வெட்டிங் சாங்’ பாடலும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு பாடல்களும் வெற்றி பெற்றிருப்பதால், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யாஆகியோர் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது.
சுதந்திர தின வார இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்’திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.