நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘பியார் பிரேமா கல்யாணம்’, திருமண வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை முன்னிட்டு, “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்ட புதிய புரமோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் இயக்கி நடித்துள்ள இப்படத்தில், சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு மனைவியின் வீட்டிலேயே கணவன் குடியேறும் சூழலை மையமாகக் கொண்டு, குடும்ப உறவுகள், கலாச்சார மோதல்கள், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களுடன் படம் நகர்கிறது.
படத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சரான பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டு செல்ல மறுக்கும் அவரால், கணவராக வரும் இளன் மனைவியின் வீட்டிற்கே குடிபெயர்கிறார். இதன் பின்னர் உருவாகும் குடும்ப கலாட்டா, உறவுச் சிக்கல்கள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகள் அனைத்தும் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்ற கருத்தை படம் வலியுறுத்துகிறது.
இளனின் வழக்கமான நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளைக் கலந்த கதை சொல்லும் பாணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. அவருடன் சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறுகையில், காதல் கதைகள் விதிகளைப் பின்பற்றுவதல்ல, அவற்றை மாற்றி எழுதுவதுதான் உண்மையான சுவாரஸ்யம் என குறிப்பிட்டார். திருமணத்திற்குப் பிறகு மணமகன், மணமகள் வீட்டிற்கே குடிபெயர்ந்தால் என்ன நடக்கும் என்ற எளிய கேள்வியை மையமாகக் கொண்டு, நவீன உறவுகள், குடும்பம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை கொண்டாடும் படமாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகும் இளன் புதிய பார்வையை கொண்டு வந்திருப்பதுடன், நட்சத்திரக் குழுவினரின் இயல்பான நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில், ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு கிடைத்த உலகளாவிய வரவேற்புக்குப் பிறகு, அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய இன்னொரு இதயப்பூர்வமான தமிழ் கதையை ரசிகர்களிடம் கொண்டு வர விரும்பியதாக தெரிவித்தார். நவீன உறவுகளின் சவால்களையும் தமிழ் குடும்ப மதிப்புகளையும் இணைக்கும் இந்தப் படம், முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்றும், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் இதனை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் உலகம் முழுவதும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை உணர்த்தும் மனதை வருடும் இசையை வழங்கியுள்ளார். திருமணத்திற்குப் பிறகே உண்மையான வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது என்பதை நகைச்சுவை மற்றும் உணர்வுகளுடன் சொல்ல வரும் ‘பியார் பிரேமா கல்யாணம்’, ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
