பிரைம் வீடியோவின் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் தொடரான ‘வதந்தி’, தனது இரண்டாவது சீசனுடன் ரசிகர்களை மீண்டும் பரபரப்பான மர்மப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த மர்மத் தொடர், முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சீசனில், நடிகர் எம். சசிகுமார், நேர்மையான காவல் அதிகாரி எஸ்.ஐ. மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதைப்படி, நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள், பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட மர்மத்தின் கதவைத் திறக்கின்றன. அந்த வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்ம நபரை நோக்கிச் செல்லும் பல அதிர்ச்சி தரும் தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்களுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதையாக அமைந்துள்ளது.
இந்தத் தொடர் குறித்து பிரைம் வீடியோ இந்தியா – ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறுகையில், தென்னிந்திய கதைகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாகவும், அந்தப் பயணத்தில் ‘வதந்தி’ முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். முதல் சீசன் வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான மெல்லிய கோட்டை விறுவிறுப்பாக சித்தரித்த நிலையில், இரண்டாவது சீசன் அந்த அனுபவத்தை மேலும் உயர்த்தும் என்றும், ஆண்ட்ரூ லூயிஸின் இயக்கமும், மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களமும் ரசிகர்களை இறுதி வரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறுகையில், தொடரின் அடையாளமான சஸ்பென்ஸ், உண்மை மற்றும் மனிதர்களின் பார்வை ஆகியவற்றை தக்கவைத்தபடியே, மேலும் உணர்வுபூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதையை இந்த சீசன் சொல்லும் என்றனர். ஆண்ட்ரூ லூயிஸ் தொடரை புதிய திசையில் கொண்டு சென்றிருப்பதுடன், சசிகுமார் மற்றும் முழு நடிகர் குழுவினரின் நடிப்பு கதைக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
