13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் ‘மூடர் கூடம்’… ‘மிஷன்: பாசிபிள்’ உடன் புதிய பரிமாணத்தில் ‘மூடர் கூடம் 2’!

23

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற படங்களில் ஒன்றான ‘மூடர் கூடம்’, 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பரிமாணத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறது. ‘மூடர் கூடம் 2: மிஷன்: பாசிபிள்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத், இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறும் தொடர்ச்சிப் படமாக இல்லாமல், முதல் பாகத்தின் டார்க் காமெடி மற்றும் தனித்துவமான கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி, கற்பனை மற்றும் சர்வதேச பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய திரையரங்கு அனுபவமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பனியால் மூடப்பட்டுள்ள பிரதேசத்தில் ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு கதாபாத்திரங்களும், கையில் துப்பாக்கியுடன் ‘Happy Life’ என்ற வாசகத்தைக் கொண்ட டெடி பியரும் இடம்பெற்றுள்ளன. ‘Mission: Possible’ என்ற துணைத் தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், படத்தின் நகைச்சுவை, மர்மம் மற்றும் அதிரடியை ஒரே நேரத்தில் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், சர்வதேச தரத்தில் உருவாகி வருகிறது. ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்க விஎஃப்எக்ஸ் குழு படத்தின் காட்சியமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால், கற்பனை உலகமும் அதிரடி காட்சிகளும் உலகத் தரத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் நவீன் ஹிதயத் கூறுகையில், ‘மூடர் கூடம்’ தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்றும், ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் கதையைத் தேடிய பிறகே இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். முதல் பாகத்தின் நகைச்சுவைத் தன்மையை தக்கவைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களையும் கதையின் பரப்பையும் இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா, கல்ட் கிளாசிக் படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது மிகப்பெரிய பொறுப்பு என்றும், இந்தப் படம் வெறும் சீக்வல் அல்ல; ரசிகர்கள் விரும்பிய உலகத்தை இன்னும் உயர்ந்த தரத்தில் மீண்டும் உருவாக்கும் முயற்சி என்றும் தெரிவித்தனர். திரையரங்குகளில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை வழங்கும் படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரீஷ்இசையமைத்துள்ள நிலையில், நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார். அதியப்பன் சிவாபடத்தொகுப்பையும், விஜய் ரத்தினம் MPSE ஒலியமைப்பையும் கவனித்துள்ளனர். சர்வதேச விஎஃப்எக்ஸ் குழுவின் பங்களிப்புடன் உருவாகி வரும் ‘மூடர் கூடம் 2: மிஷன்: பாசிபிள்’, முதல் பாகத்தின் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படைப்பாக உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த சில மாதங்களில் படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.