‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் மீண்டும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கும் இந்த ஆக்ஷன் டிராமாவில், நடிகர் கே. மணிகண்டன் முதன்முறையாக முழுநீள ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள மணிகண்டனின் அடுத்த முக்கிய திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ அமைகிறது. சமூக வேர்களையும், உணர்வுபூர்வமான கதையையும், விறுவிறுப்பான ஆக்ஷனையும் இணைக்கும் படைப்பாக இது உருவாகி வருகிறது.
கண்ணியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அமைப்பால் எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். உயிர்வாழ்வுக்கான அந்தப் போராட்டம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் நிலைக்கு அவரை கொண்டு செல்கிறது. ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையேயான எல்லை எவ்வாறு மங்குகிறது என்பதையே படம் மையமாகக் கொண்டுள்ளது.
படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை பிரதீபன் செல்வரத்தினம் மேற்கொள்ள, படத்தொகுப்பை அருள் மோசஸ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைக் காட்சிகளை டான் அசோக், ஒலியமைப்பை ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பை சுரேஷ்குமார் மற்றும் ஒப்பனையை ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர். ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் இரண்டாவது படைப்பாக உருவாகும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
படம் குறித்து பிர்லா ஸ்டுடியோஸின் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி பேசுகையில், வலுவான கதைகளையும் புதிய குரல்களையும் தொடர்ந்து ஆதரிப்பதில் நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும், இயக்குநர் சந்தோஷ் குமார் தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே அதற்கான பார்வையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறினார். மணிகண்டனின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும், உணர்வுகளும் பொழுதுபோக்கும் கலந்த இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த், தமிழ் சினிமாவின் திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் குமாரை இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர். அதேபோல், இயக்குநர் மையப்படுத்திய தரமான திரைப்படங்களை ஆதரிக்கும் பிர்லா ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைந்திருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாக கூறினர்.
நடிகர் கே. மணிகண்டன் பேசுகையில், கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட வித்தியாசமான ஆக்ஷன் டிராமா என்பதாலும், திரைக்கதையின் நேர்மையும் புதுமையும் தன்னை உடனடியாக ஈர்த்ததாகவும் கூறினார். இயக்குநர் சந்தோஷ் குமார் கதை சொன்ன தருணத்திலேயே இந்தப் படம் தனது கனவுத் திட்டமாக மாறிவிட்டதாகவும், நினைத்தபடியே படம் உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் சந்தோஷ் குமார் பேசுகையில், தனது வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் மற்றும் சமூகத்தில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே ‘மக்கள் காவலன்’ கதை உருவானதாக கூறினார். அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் சமத்துவமின்மையையும், அதற்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் பயணத்தையும் படம் பேசும் என்றார். தனது முதல் முழுநீள திரைப்படத்திற்கே வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸுக்கு நன்றியும் தெரிவித்தார்.
வலுவான கதைக்களம், சமூக அரசியல் பின்னணி, ஆக்ஷன் மற்றும் உணர்வுகளை இணைக்கும் திரைக்கதையுடன் உருவாகி வரும் ‘மக்கள் காவலன்’, மணிகண்டனின் திரைப்பயணத்தில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாகவும், பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியின் அடுத்த முக்கிய படைப்பாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
