நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர். கார்த்திகேயன் இயக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம், கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அபிநயா செல்வம், ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்திற்குப் பிறகு நல்ல கதைக்காக காத்திருந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறிய கதை அனைவருக்கும் பிடித்ததாக தெரிவித்தார். அசோக் செல்வன் முழு நம்பிக்கையுடனும் ஒத்துழைப்புடனும் படத்தில் பணியாற்றியதாகவும், படத்தின் பணிகள் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில், ‘அன்பில் அவன்’ பெண்களின் கனவுகள், அவற்றை அடைவதற்கான முயற்சிகள், போராட்டங்கள் மற்றும் சவால்களை காதல் மற்றும் உணர்வுகளுடன் பேசும் திரைப்படம் என்றார். அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் ஃபிரெஷ்ஷான திரை இணை, அழகான காட்சியமைப்பு, சிறப்பான தொழில்நுட்பக் குழு மற்றும் கோவிந்த் வசந்தாவின் இசை ஆகியவை படத்தின் முக்கிய பலங்களாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன், ‘அன்பில் அவன்’ திரைப்படம் தனது இதயத்திற்கு நெருக்கமான படைப்பு என்றும், நீண்ட நாட்களாக இந்தப் படத்திற்காக காத்திருப்பதாகவும் கூறினார். திருமணமானவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் இப்படம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தன்னுடன் இணைந்து நடித்த அசோக் செல்வனுக்கு நன்றியும் தெரிவித்தார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ‘அன்பில் அவன்’ திரைப்படம் காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதை மையமாகக் கொண்டது என்றார். கதையின் கரு ஏற்கனவே அறிமுகமானதாக இருந்தாலும், அதன் திரைக்கதை மற்றும் திரையரங்க அனுபவம் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பெண்கள் ரசிக்கும் அம்சங்களுடன், ரசிகர்களைக் கவரும் பல மாஸ் தருணங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், “காதல் புத்திசாலியை முட்டாளாக்கும்; சாதாரணமானவனை சாதனையாளராக்கும்” என்ற கருத்தை பிரதிபலிக்கும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அசோக் செல்வன் தெரிவித்தார். ‘அன்பில் அவன்’ ஒரு அழகான காதல் கதையாகவும், அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் படமாகவும் இருக்கும் எனவும் அவர் கூறினார்.
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ‘96’ திரைப்படத்தின் இசையைப் போலவே ‘அன்பில் அவன்’ படத்தின் இசையும் பேசப்படும் என்ற நம்பிக்கையை அசோக் செல்வன் வெளிப்படுத்தியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார்.
காதல், கனவு, உறவுகள் மற்றும் வாழ்க்கையின் சவால்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’, வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.






