மணிகண்டனின் அடுத்த அதிரடி ஆட்டம் – ‘மக்கள் காவலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

6

கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படமான ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணையும் அடுத்த திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ உருவாகியுள்ளது. பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான, சமூகப் பின்னணி கொண்ட கதைகளை உருவாக்கி வரும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட படங்களின் வணிக வெற்றியைத் தொடர்ந்து கே. மணிகண்டன் நடிக்கும் இப்படம், அவர் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் டிராமா திரைப்படமாகவும் அமைந்துள்ளது.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘மக்கள் காவலன்’, கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது. ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு அவரை சரணடைவதா அல்லது எதிர்த்து போராடுவதா என்ற இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர்வாழ்வதற்கான போராட்டமாகத் தொடங்கும் கதை, பின்னர் மிகப்பெரிய பரிமாணத்தை அடைகிறது.

தான் ஒருபோதும் விரும்பாத ஒரு தலைவராக மாற வேண்டிய சூழலுக்குள் கதாநாயகன் தள்ளப்படுவதும், போராட்டம் தீவிரமடையும்போது அதற்கான விலையும் அதிகரிப்பதும் படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது. ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மெல்ல மறையும் நிலையில், பிறப்பு சூழலோ அல்லது தன்னைச் சுற்றியுள்ள தடைகளோ தனது லட்சியத்தின் எல்லையை நிர்ணயிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் பயணத்தை இப்படம் பேசுகிறது.

உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சல், தடைகளைத் தாண்டி தொடர்ந்து முன்னேறும் மன உறுதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இதனுடன், நடிகர் மணிகண்டனின் சொந்த திரைப்பயணமும் இந்தக் கருப்பொருளுடன் ஒத்துப்போவதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பது என திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய மணிகண்டன், இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு, தனது கலை மீதான அர்ப்பணிப்புடன் பயணித்து வரும் அவரது திரைப்பயணத்தை பிரதிபலிக்கும் வகையில், மணிகண்டனின் பிறந்தநாளில் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கே. மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்ய, அருள் மோசஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பாப்பநாடு சி. உதயகுமார் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். டான் அசோக் சண்டைப் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். ஆண்டனி ஜெயரூபன் ஒலி வடிவமைப்பையும், சுரேஷ்குமார் ஆடை வடிவமைப்பையும், ராமச்சந்திரன் ஒப்பனையையும் கவனித்துள்ளனர். ‘பைசன் காளமாடன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

பெரிய திரைக்கான அதிரடி ஆக்‌ஷன் கதையுடன் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம், டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.