தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்கப்படாத கடலோர வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ வெளியாகியுள்ளது. சூரி மற்றும் மகிமா நம்பியார் இணைந்து தோன்றும் இந்தக் காதல் பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். பாய்மரப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, கடலின் நடுவே நடைபெறும் பரபரப்பான படகுப் பந்தயம், போட்டியின் வெறி மற்றும் வெற்றிக்கான போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார், பாலா சரவணன், மிதுன் மற்றும் கீர்த்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment Pvt. Ltd.) நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கடினமான கடலோர சூழல்களில் படமாக்கப்பட்டுள்ள ‘மண்டாடி’, அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தின் மூலம் ரசிகர்களுக்கு புதிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. பாய்மரப் போட்டியின் வேகம், கடலோர மக்களின் வாழ்வியல், போட்டியின் பரபரப்பு மற்றும் மனிதர்களின் உணர்வுகள் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக ‘உசுரே நீதான் புள்ள’ வெளியாகியுள்ளது. சூரி மற்றும் மகிமா நம்பியார் கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதல் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அழகான இணைப்பை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்யும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
மென்மையான மெலடி இசை, மனதைத் தொடும் வரிகள் மற்றும் கதாநாயகன்–கதாநாயகியின் அழகான கெமிஸ்ட்ரி ஆகியவை ‘உசுரே நீதான் புள்ள’ பாடலின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன. காதலின் இனிமையையும், தங்களது வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க வேண்டும் என்ற காதலர்களின் ஏக்கத்தையும் பாடல் வரிகள் அழகாக வெளிப்படுத்துகின்றன.
“சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர, உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள…” என காதலின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்பாடலுக்கு ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகள் எழுதியுள்ளார். கபில் கபிலன் மற்றும் சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் மென்மையான இசையமைப்புடன் இணைந்து பாடகர்களின் குரலும் பாடலுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளது.
விளையாட்டு, ஆக்ஷன் மற்றும் காதல் ஆகியவற்றை கடலோர வாழ்வியலுடன் இணைத்து உருவாகியுள்ள ‘மண்டாடி’, தமிழ் சினிமாவில் வித்தியாசமான களத்தை அறிமுகப்படுத்தும் திரைப்படமாக உருவாகி வருகிறது. குறிப்பாக பாய்மரப் போட்டியை மையமாகக் கொண்டிருப்பதால், கடலில் படமாக்கப்பட்டுள்ள போட்டிக் காட்சிகள் படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் மூலம் படத்தின் காதல் உலகமும் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே வெளியான ‘மண்டாடி மண்டாடி’ பாடலுக்கு கிடைத்த வரவேற்புடன், இந்தப் புதிய மெலடியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘மண்டாடி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.