மகுடஞ்சாவடி இலவச நீட் பயிற்சி மையம் சாதனை… 6 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம்!

7

தமிழ்நாட்டில் நீட் தேர்வைச் சுற்றிய அரசியல் மற்றும் சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் இலவச நீட் பயிற்சி மையம் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ்.-ல் இடம் பெற்றுள்ளனர்.

கிராமப்புற மற்றும் தமிழ் வழி மாணவர்களுக்கு நீட் தேர்வு சவாலாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு போராடி வரும் சூழலில், பொருளாதார மற்றும் கல்வி வசதிகளில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களும் சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கிடைத்தால் மருத்துவக் கல்வியில் இடம் பெற முடியும் என்பதை மகுடஞ்சாவடியின் இந்த இலவச பயிற்சி மையம் நிரூபித்துள்ளது.

சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த இலவச நீட் பயிற்சி மையம், கோயம்புத்தூரைச் சேர்ந்த கங்கா மருத்துவமனை நிறுவனத்தின் ஆதரவுடன் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மையத்தை காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

சிலுவம்பாளையம், கவுண்டனேரி, வெள்ளாண்டிவலசு உள்ளிட்ட மகுடஞ்சாவடியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பயிற்சி மையத்தில் படித்து வருகின்றனர். இதில் சிலர் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து வகுப்புகளில் பங்கேற்றதுடன், பகுதி நேர வேலைகளையும் மேற்கொண்டு இரவு நேரங்களில் படித்துள்ளனர். குறிப்பாக சிரமமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட மாணவிகளுக்காக இலவச விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற நீட் கலந்தாய்வு நிறைவடைந்தபோது, இந்தப் பயிற்சி மையத்தில் பயின்ற ஆறு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் இடம் பெற்றது தெரியவந்தது. ஓராண்டு காலம் மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இந்த வெற்றியை காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த மாணவர்களிடம் திறமையோ முயற்சியோ குறைவாக இருக்கவில்லை. ஆனால், அவர்களுக்குத் தேவையான வாய்ப்பும் வசதியும் கிடைக்கவில்லை. அருகில் பயிற்சி மையம் இல்லாதது, அதிக பயிற்சிக் கட்டணம், தமிழில் போதுமான கல்வி வளங்கள் இல்லாதது மற்றும் மாணவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டிய ஆதரவு போன்றவை முக்கிய தடைகளாக இருந்தன” என்றார்.

தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் வகையில் வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டதுடன், ஒவ்வொரு புதன்கிழமையும் அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

“ஒரு மாணவி, ‘கேள்வியே புரியவில்லை என்றால் எப்படி பதில் சொல்வது?’ என்று தனது சிரமத்தை வெளிப்படுத்தினார். அதுவே இந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவாலை எங்களுக்குப் புரிய வைத்தது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என மூவரும் இணைந்து பகிர்ந்து கொண்ட ஒரே கனவுதான் இந்த வெற்றிக்கு காரணம்,” என்று காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

இந்த முயற்சிக்கு சிஎஸ்ஆர் அடிப்படையில் ஆதரவு வழங்கிய கங்கா மருத்துவமனை நிர்வாகம், ஆலோசகர்கள் சதீஷ் மற்றும் ராஜேஷ், ஆசிரியர்கள் செந்தில், சக்திவேல், திலகம், ஒருங்கிணைப்பாளர் அருண் தங்கராஜ் மற்றும் டைபிஸ்ட் சுகன்யா உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

“இன்று மருத்துவப் படிப்பில் இடம் பெற்றுள்ள இந்த மாணவர்கள், எதிர்காலத்தில் தங்களுக்கு கிடைத்த இந்த உதவியை மற்ற மாணவர்களுக்கும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிறிய அளவில் தொடங்கிய இந்த முயற்சி, எதிர்காலத்தில் மிகப்பெரிய கல்வி மாற்றத்திற்கு வழிவகுக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் தலைமுறை கல்லூரி மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்சி வசதிகளை எளிதில் அணுக முடியாத கிராமப்புற மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளையின் இந்த முயற்சி, இலவச பயிற்சி, கல்விப் பொருட்கள், வழிகாட்டுதல் மற்றும் மாணவிகளுக்கான விடுதி வசதி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

நீட் தேர்வைச் சுற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மகுடஞ்சாவடியைச் சேர்ந்த இந்த ஆறு மாணவர்களின் மருத்துவக் கல்லூரிப் பயணம், கிராமப்புற மாணவர்களுக்கு சரியான வாய்ப்பும் தரமான வழிகாட்டுதலும் கிடைத்தால் அவர்களாலும் உயர்கல்வி கனவுகளை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.