பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படம், வரும் 2026 தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணையும் இந்தப் படம், நகைச்சுவை, இசை, நடனம் என குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஊடக நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மனோஜ் என்.எஸ், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிரபுதேவாவுடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிறப்புத் தோற்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான்… 16 கதாபாத்திரங்களில் யோகி பாபு!
‘மூன்வாக்’ திரைப்படத்தின் முக்கியமான ஹைலைட்டுகளில் ஒன்றாக ஏ.ஆர். ரஹ்மானின் நடிப்பு அமைந்துள்ளது. இசையமைப்பாளராக மட்டுமின்றி, இப்படத்தில் ஜாலியான சிறப்புத் தோற்றத்தில் நடிகராகவும் அவர் அறிமுகமாகிறார்.
அதேபோல், நடிகர் யோகி பாபு 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நகைச்சுவை, இசை மற்றும் நடனத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில் இந்த இரு அம்சங்களும் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“குடும்பத்தினர் அனைவரும் சிரிப்புடன் திரையரங்கை விட்டு வெளியேற வேண்டும்!”
படம் குறித்து இயக்குநர் மனோஜ் என்.எஸ் கூறுகையில், தீபாவளி என்பது குடும்பங்களை ஒன்றிணைக்கும் திருவிழா என்றும், அதேபோல் ‘மூன்வாக்’ திரைப்படமும் குடும்பத்தினரை ஒன்றாக மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி, சிரிப்பு, இசை மற்றும் நடனத்தின் கொண்டாட்டமாக இப்படம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த தீபாவளியில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக திரையரங்கிற்கு வந்து, முகம் நிறைய சிரிப்புடன் வெளியேறும் அனுபவத்தை வழங்குவதே படக்குழுவின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
கவனம் ஈர்த்த பாடல்கள்
‘மூன்வாக்’ திரைப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள ‘ஏத்து’ (Yethu), ‘டிங்கா’ (Tinga) மற்றும் ‘மகரினா’ (Macarena) ஆகிய மூன்று பாடல்களும் இசை மற்றும் நடன ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள ‘மயிலே’ (Mayile) என்ற நான்காவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை, பிரபுதேவாவின் நடனம், யோகி பாபுவின் பல்வேறு கதாபாத்திரங்கள் என இசை மற்றும் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படம், 2026 தீபாவளி பண்டிகைக் காலத்தில் குடும்ப பார்வையாளர்களை குறிவைத்துள்ள முக்கியமான பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
பிரம்மாண்ட தொழில்நுட்பக் கூட்டணி
இப்படத்திற்கு அனூப். வி. ஷைலஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சேகர் வி.ஜே மற்றும் பியூஷ்–ஷாஜியா ஆகியோர் நடன இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். ஷனூ கலை இயக்குநராகவும், திவ்யா ஜார்ஜ் மற்றும் ஸ்வேதா ராஜு ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலக் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
‘மூன்வாக்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் சர்வதேச திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இசை உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நகைச்சுவை, இசை, நடனம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ள ‘மூன்வாக்’, 2026 தீபாவளியை திரையரங்குகளில் கொண்டாட்டமாக மாற்றும் நோக்கத்துடன் தயாராகி வருகிறது. பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான்கூட்டணி மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் நடிப்பு, யோகி பாபுவின் 16 கதாபாத்திரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.