பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பை வரும் செப்டம்பர் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இதனை முன்னிட்டு படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி மலையாளத்தில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில், தமிழ் ரசிகர்களுக்கும் இப்படத்தை கொண்டு சேர்க்கும் வகையில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தமிழ் பதிப்பை வெளியிடுகின்றன.
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் பகத் பாசில், உன்னி மாயா பிரசாத், இயக்குநர் கிரீஷ் ஏ. டி. உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் நிவின் பாலி மற்றும் நாயகி மமீதா பைஜூ தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் உன்னி மாயா பிரசாத், மலையாள ரசிகர்களைப் போலவே தமிழ் ரசிகர்களும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். குடும்பத்தினருடன் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் கிரீஷ் ஏ. டி. பேசுகையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளதாகவும், தமிழ் ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை ரசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்ற பெயர் கேரளாவில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள மக்களை வகைப்படுத்தும் ஒரு சொல்லாடலில் இருந்து உருவானது என்றும் அவர் தெரிவித்தார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரம் தனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவானது என்றும் கிரீஷ் ஏ. டி. குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் பகத் பாசில் பேசுகையில், நிவின் பாலி மற்றும் மமீதா பைஜூ நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதது குறித்து தெரிவித்ததுடன், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றும் கூறினார்.
தினேஷ் மற்றும் ஷியாம் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளதாக குறிப்பிட்ட பகத் பாசில், தங்களது நட்பு 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருவதாகவும், தங்களது இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அழகான திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர் கிரீஷ் ஏ. டி. உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும், தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல திரைப்படங்களை வரவேற்று கொண்டாடுபவர்கள் என்றும், அந்த வகையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தையும் அவர்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக பகத் பாசில் கூறினார். மலையாளத்தில் இப்படத்திற்கு வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் பகத் பாசில் & பிரண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் தமிழ் பதிப்பை ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.