மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 திரைப்படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.
விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். படத்தின் தலைப்பு அறிவிப்புக்காக ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விஷ்ணு மோகனின் மூன்றாவது திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இவர் இயக்குநராக அறிமுகமான ‘மேப்படியான்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்று கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை
ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆபரேஷன் கங்கா’ மீட்புப் பணியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. மோகன்லால் விரைவில் படப்பிடிப்பில் இணையவுள்ளார். மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
மோகன்லாலுடன் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்
மோகன்லாலுடன் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். வெளிநாடு மற்றும் பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக ‘ஆபரேஷன் கங்கா’ உருவாகி வருகிறது.
முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணி
‘துரந்தர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபல இசையமைப்பாளர் ஷாஷ்வத் சச்தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
‘புஷ்பா 1’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘துரந்தர்’, ‘கில்’ உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் இயக்குநராக பணியாற்றிய சே யங் ஓ, இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
‘GOAT’, ‘மெய்யழகன்’, ‘அமரன்’, ‘கதனார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் புரொடக்ஷன் டிசைனை கவனிக்கிறார். எடிட்டராக ஷமீர் முகமது பணியாற்றுகிறார்.
‘துரந்தர்’, ‘யூரி’, ‘3 இடியட்ஸ்’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிஷ்வதீப் சட்டர்ஜி சவுண்ட் டிசைனராக இணைந்துள்ளார். ‘காந்தாரா’ படத்தின் VFX மேற்பார்வையாளராக பணியாற்றிய கே.வி. சஞ்சித் இப்படத்தின் VFX பணிகளை கவனிக்கிறார்.
‘Safed Sagar’, ‘Border 2’, ‘Fighter’ உள்ளிட்ட படங்களில் மிலிட்டரி ஆலோசகராக பணியாற்றிய Squadron Leader Verlin Panwar, ‘ஆபரேஷன் கங்கா’ படத்திலும் மிலிட்டரி ஆலோசகராக இணைந்துள்ளார்.
‘Lokah’ படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் மெல்வி ஜே, மேக்கப் கலைஞர் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் புரொடக்ஷன் கன்ட்ரோலர் ரின்னி திவாகர் ஆகியோரும் இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸின் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள்
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கோபி நடிக்கும் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயசூர்யா நடிக்கும் ‘கதனார்’ மற்றும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் ‘கில்லர்’ உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட திரைப்படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன.
மோகன்லால் – விஷ்ணு மோகன் கூட்டணியில், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீட்புப் பணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘ஆபரேஷன் கங்கா’, பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
