‘த்ரிஷ்யம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘சண்டக்காரி’. ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை புன்னகை பூ கீதா தயாரித்துள்ளார்.
காதல், காமெடி, மோதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கலகலப்பான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை பின்னணியாகக் கொண்டு ‘சண்டக்காரி’ படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியர் கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார்.
அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள், ஈகோ, கோபம் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதலுக்கும் சண்டைக்கும் இடையே பயணிக்கும் விமல் – ஸ்ரேயா கதாபாத்திரங்களின் கலாட்டா படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இந்த இருவருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். விமல் – ஸ்ரேயா இடையே தொடர்ந்து நடைபெறும் மோதல்களில் சத்யன் மாட்டிக்கொள்ளும் சூழல்கள் படத்தின் முக்கியமான காமெடி பகுதிகளாக இடம்பெற்றுள்ளன. விமல், ஸ்ரேயா மற்றும் சத்யன் கூட்டணி திரையில் உருவாக்கியுள்ள நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரபு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ படத்தின் வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.
காதலில் தொடங்கி, சண்டையில் சிக்கி, காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’ திரைப்படம், விமல் – ஸ்ரேயா இணையும் புதிய கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

