கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறை நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
டிராமா கம்பெனி சார்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் ஆகியோரின் திரை இணைவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இருவரின் இயல்பான மற்றும் குறும்புத்தனமான தோற்றத்துடன், அவர்களைச் சுற்றியுள்ள பட்டாசுகள் இணைந்து மாறுபட்ட காட்சியனுபவத்தை உருவாக்கியுள்ளன.
மேலும், ‘PICASSO’ என்ற படத்தின் தலைப்பு கையால் வரையப்பட்டதைப் போன்ற மஞ்சள் நிற எழுத்துக்களில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களமும் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபுஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதை மற்றும் காட்சியமைப்புடன் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
