“இந்திய சினிமா இதுவரை கேட்காத கேள்வி…” – ‘என்ன விலை’ குறித்து கருணாஸ்!

14

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வம்பரன், “பல சிறிய விஷயங்களுக்கு இந்தப் படம் முன்னுதாரணமாக இருக்கும். படக்குழுவினரோடு ராமேஸ்வரம் மக்களும் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலனை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம் பேசுகையில், “ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நடிகர் கருணாஸ் பெரிய நடிகர் என்ற அலட்டல் இல்லாமல் எங்களிடம் இயல்பாக பழகினார். படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

நடிகர் பிரதீப், “இது ஒரு அருமையான படம். இதில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அண்ணன் கருணாஸ் ஆகியோருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

நடிகர் தர்ஷன், “இந்தப் படத்தில் எனக்கு ரைட்டர் கதாபாத்திரம். படம் அனுப்பப்பட்ட அனைத்து விருது விழாக்களிலும் விருதுகளை வென்றிருக்கிறது. மிகச்சிறந்த வெற்றிப் படமாக இது மாற வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

நடிகை நிரோஷா பேசுகையில், “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பு என்று தெரியாமல் இயல்பாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

நடிகர் கவி, “பல நாடுகளின் விருது விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியுள்ளது. எப்போது நம் நாட்டு மக்களுடன் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம். தற்போது மக்களுடன் இணைந்து இந்தப் படத்தை கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி” என்று கூறினார்.

நடிகர் பாண்டி, “ரொம்ப நாட்களாக இந்தப் படத்திற்காக காத்திருந்தோம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களைத் தாண்டி பெயர் எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்தப் படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”என்றார்.

நடிகை சாஷா, “இயக்குநர் சஜீவ் சார், தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறியுள்ளது. ராமேஸ்வரத்தில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். 13 விருது விழாக்களில் இந்தப் படம் விருது வென்றிருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் சஜீவ் பழூர் பேசுகையில், “‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து கதையாக உருவானவை. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் ‘என்ன விலை’ படத்தையும் இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

விழாவின் முக்கிய உரையாக அமைந்தது நடிகர் கருணாஸ் பேச்சு. அவர் கூறுகையில், “கடந்த 2001ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கிய ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அதனால் மலையாள எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நடந்திருக்கிறது” என்றார்.

மேலும், “இந்தப் படம் சாமானியர்களைப் பற்றியது. அதனால்தான் இயல்பான நடிகர்களை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி தயாரிப்பாளர்கள் ஏழு கோடி ரூபாய் இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதையின் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்தப் படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பியிருக்கிறார். என்னுடைய 20 ஆண்டு கால ஆசையை இந்தப் படம் நிறைவேற்றியுள்ளது”என்று தெரிவித்தார்.

நடிகை நிமிஷா சஜயனைப் பாராட்டிய கருணாஸ், “அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா அற்புதமாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாக தேர்வு செய்திருக்கிறார். படம் வெளியாவதற்கு முன்பே முன்னணி ஓடிடி தளம் படத்தை வாங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், “‘நந்தா’ படத்திற்குப் பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்து என் மனைவி முதன்முறையாக இந்தப் படத்தில்தான் என்னைப் பாராட்டியிருக்கிறார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பைப் பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்தப் படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விருது விழாக்களில் கவனம் பெற்றுள்ள ‘என்ன விலை’, தற்போது திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.