முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம், காதலை மையமாகக் கொண்டு அழகான உணர்வுகளையும், சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் கலந்து உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.
‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
காதல், அழகான உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு என உருவாகியுள்ள இப்படம், வரும் செப்டம்பர் 25ஆம் தேதிஉலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. அன்றைய தினம் ‘அன்பில் அவன்’ திரைப்படத்துடன் காதல் கொண்டாட்டத்தை தொடங்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
