“நம் வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவுதான் ‘சிக்மா’” – இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

6

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் Head தமிழ்குமரன், “‘சிக்மா’ திரைப்படம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு மட்டுமல்ல, எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிகவும் முக்கியமான படம். நாங்கள் தயாரித்த முதல் படம் ‘கத்தி’. தற்போது ஜேசன் சஞ்சய் எங்கள் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது பெருமையாக உள்ளது. சஞ்சய் மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.

‘கோலமாவு கோகிலா’ மூலம் நெல்சனையும், ‘டான்’ மூலம் சிபி சக்கரவர்த்தியையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினோம். இன்று அவர்கள் நல்ல நிலையை அடைந்துள்ளனர். அதேபோல் ‘சிக்மா’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று நம்புகிறோம். நிச்சயம் சஞ்சய் மிகப்பெரிய உயரத்தை அடைவார். சந்தீப் கிஷன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர். சுபாஸ்கரன் சார் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை ஃபரியா அப்துல்லா பேசுகையில், “இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். தயாரிப்பாளர்கள் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இயக்குநர் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள். ஃபிலிம் மேக்கிங் மற்றும் சினிமா மீது அவருக்கு அதிக ஆர்வம் உள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கிறார்கள். சந்தீப் கிஷனை இதற்கு முன்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டார்கள். படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பேசுகையில், “இயக்குநர் சஞ்சய்க்கு இது ஒரு தங்கமான வாய்ப்பு. அதை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். பொறுமையாக தனது கருத்துகளை எடுத்துச் சொல்லி, தனக்கு தேவையான வேலையை சரியாக வாங்கிக் கொள்வார். அவருக்காகவே இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். இசையமைப்பாளர் தமன் சாருக்கும் நன்றி. சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். அடுத்து அவர் நடிக்கவும் வர வேண்டும். வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் சந்தீப் கிஷன் பேசுகையில், “‘சிக்மா’ போன்ற படம் மிகவும் அரிதாகவே உருவாகும். இதற்கு முக்கிய காரணமான இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

‘சிக்மா’ மிகவும் ஜாலியான ஜென்ஸீ திரைப்படம். தனது முதல் படத்தை நான் சிறப்பாக செய்வேன் என்று நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்த சஞ்சய்க்கு நன்றி. நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தை பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதுபோல ‘சிக்மா’ படத்திற்கும் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரொடக்ஷன்ஸ். படக்குழுவினர் அனைவரும் சின்சியராக உழைத்துள்ளனர். நிச்சயம் இந்தப் படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில், “‘சிக்மா’ படத்தின் பிரமோஷன் பணிகளை சேலத்தில் இருந்து தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அதனால் சேலத்துடன் நிறைய அழகான நினைவுகள் உள்ளன.

சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சார், சந்தீப், ஃபரியா மற்றும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினருக்கும் நன்றி. நான் இயக்கிய முதல் படமான ‘சிக்மா’ அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.

நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ‘சிக்மா மொமண்ட்’ கண்டிப்பாக இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையையே மாற்றும். அதுதான் ‘சிக்மா’ திரைப்படம். அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.

ஜேசன் சஞ்சய்யின் முதல் படமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.