AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, படத்தை உருவாக்கிய அனுபவங்கள் மற்றும் படக்குழுவினரின் உழைப்பு குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.
விழாவில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்டோருக்கு உயர்தர கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். மேலும், ஜி.வி. பிரகாஷுக்கு RX100 பைக் ஒன்றையும் பரிசாக வழங்கி அசத்தினார்.
படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசுகையில், “இம்மார்டல்” திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டதாகவும், சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே படக்குழு கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்தார். அந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக கூறினார்.
மேலும், படப்பிடிப்பு தொடங்கியது முதல் வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை ஜி.வி. பிரகாஷ் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று படத்தைப் புரமோட் செய்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
தமிழகத்தில் படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலனுக்கும் தயாரிப்பாளர் நன்றி தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியிடப்பட்டதாகவும், ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஜி.வி. பிரகாஷ், சக்திவேலன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினருக்கும், படத்தின் வெற்றியை மக்களிடம் கொண்டு சென்ற ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த வெற்றியில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
எடிட்டர் ராஜேஷ் பேசுகையில், ‘இம்மார்டல்’ படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். படம் வெளியான பிறகு பல இயக்குநர்கள் தன்னைத் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், அவர்களின் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், சாம் சி.எஸ்., இயக்குநர் மாரியப்பன் சின்னா உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.
படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், “விநியோகம் என்பது வியாபாரம் சம்பந்தப்பட்டது என்றாலும், ஒரு படம் வெற்றி பெறும்போது கிடைக்கும் சந்தோஷமும் உற்சாகமும் மிகப்பெரிய எனர்ஜியை தருகிறது” என்றார். ‘இம்மார்டல்’ படக்குழுவினர், குறிப்பாக சிஜி பணிகளில் மிகப்பெரிய உழைப்பை செலுத்தியதாக பாராட்டிய அவர், ஆரம்பத்தில் பத்திரிகை நண்பர்கள் வழங்கிய ஆதரவும் பாராட்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதலே நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், ஷோ பை ஷோ வசூல் அதிகரித்ததாகவும் சக்திவேலன் தெரிவித்தார். ஜி.வி. பிரகாஷுடன் இதுவரை ஏழு படங்களில் பணியாற்றியுள்ளதாகவும், அந்த ஏழு படங்களுமே தனக்கு வெற்றிப் படங்களாக அமைந்ததாகவும் கூறினார். மேலும், ஜி.வி. பிரகாஷின் கேரியரில் அதிக வசூல் செய்த ஐந்து படங்களில் நான்கு படங்கள் தனது வெளியீடுகள் என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், ‘இம்மார்டல்’ படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கும் விமர்சனங்களுக்கும் நன்றி தெரிவித்தார். ஐடி துறையை விட்டு சினிமாவுக்கு வந்த தனக்கு, சில நேரங்களில் இந்தத் துறையில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும், ஆனால் இப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் சினிமாவில் தனக்கான இடம் இருப்பதாக நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘இம்மார்டல்’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து முற்றிலும் வித்தியாசமான ஜானரில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், இந்தப் படத்தில் செய்த சில தவறுகளை சரிசெய்து இன்னும் சிறப்பான படத்தை உருவாக்க வேண்டும் என்றும் கார்த்தி கூறினார். தனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மாரியப்பன் சின்னாவுக்கும், ஜி.வி. பிரகாஷ், சாம் சி.எஸ். உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகர் குமார் நடராஜன் பேசுகையில், ‘இம்மார்டல்’ படத்தின் வெற்றிக்கு இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் உழைப்பே முக்கிய காரணம் என பாராட்டினார். கதை சொல்லும்போதே படம் எப்படி உருவாக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த இயக்குநர், தான் நினைத்ததை திரையில் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வித்தியாசமான கதையை முழுமையாக நம்பி இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும், படத்தை சிறப்பாக வெளியிட்ட சக்திவேலனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். சிஜி பணிகள், சாம் சி.எஸ். இசை மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் பிரம்மாண்டத்தையும் தாக்கத்தையும் அதிகப்படுத்தியதாக கூறினார். ஜி.வி. பிரகாஷ் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து நடிக்கக்கூடியவர் என்றும், இப்படத்திலும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் குமார் நடராஜன் பாராட்டினார்.
நடிகை மிருதுளா பேசுகையில், ‘இம்மார்டல்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், படத்தில் பணியாற்றிய அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சியாக ரசித்ததாக தெரிவித்தார். குறிப்பாக சில சண்டைக் காட்சிகளில் நடித்ததாகவும், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மாரியப்பன் சின்னாவுக்கு நன்றி தெரிவித்ததுடன், படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளையும் கூறினார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசுகையில், ‘இம்மார்டல்’ திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே இருந்ததாக தெரிவித்தார். படத்தைப் பார்த்தபோதே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்படம் அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும், அந்த நம்பிக்கை தற்போது வெற்றியாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
ஒரு படம் வெற்றி பெற கதை அல்லது பிரம்மாண்டமான மேக்கிங் மட்டுமின்றி, அதில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும் நேர்மறையான எனர்ஜியும் முக்கியம் எனக் குறிப்பிட்ட சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் பொறுமைக்கும் உழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், படத்தின் வெற்றியை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி கூறினார்.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசுகையில், தனது முதல் படமான ‘இம்மார்டல்’ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு அறிமுக இயக்குநராக தனக்கு கிடைத்த ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஜி.வி. பிரகாஷ், சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், ஸ்டண்ட் குழுவினர், VFX மேற்பார்வையாளர் மஹி, கோபி பிரசன்னா, மிக்ஸிங் பணிகளை மேற்கொண்ட ஷிவா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், ‘இம்மார்டல்’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும் நேர்மறையான விமர்சனங்களையும் வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்தார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், படம் டிரெண்டிங்கில் வந்ததைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்ததாகவும் கூறினார்.
வெள்ளிக்கிழமை சிறிய திரைகளில் தொடங்கி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகள் மற்றும் கூடுதல் காட்சிகள் என படத்தை சிறப்பாக வெளியிட்ட சக்திவேலனுக்கும் நன்றி தெரிவித்தார். இப்படத்தை தன்னிடம் முதலில் கொண்டு வந்த எடிட்டர் ஷான் லோகேஷுக்கும் நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ், முதல் முறையாக ஒரு படத்தை தயாரித்த அருண்குமார் தனசேகரன் சிஜி பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பொறுமையாக இருந்ததாகவும் பாராட்டினார்.
மேலும், படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைனில் சிறப்பாக பணியாற்றிய கோபி பிரசன்னா மற்றும் அவரது குழுவினருக்கும் ஜி.வி. பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.
ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவுடன் ‘இம்மார்டல்’ பெற்ற வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர், தொடர்ந்து தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.











