தேசிய விருது… மாநில விருது… சர்வதேச விருது… அப்புக்குட்டியின் அசத்தல் சாதனை!

8

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அப்புக்குட்டி, கதையின் நாயகனாகவும், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தேசிய விருது, மாநில விருது மற்றும் சர்வதேச விருது என பல்வேறு விருதுகளை தனது நடிப்புக்காக பெற்றுள்ள அப்புக்குட்டியின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘வாழ்க விவசாயி’ திரைப்படம் தமிழக அரசு விருதை பெற்றுள்ள நிலையில், இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் நடித்ததற்காக அப்புக்குட்டிக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல், அவர் நடித்த ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் சர்வதேச விருதை பெற்றது. இதன் மூலம் தனது நடிப்புத் திறமைக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும், சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்ற நடிகராக அப்புக்குட்டி திகழ்ந்து வருகிறார்.

கதையின் நாயகனாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அப்புக்குட்டி, தனது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களையும் தொடர்ந்து தேர்வு செய்து வருகிறார். ஆர். கண்ணியப்பன் இயக்கும் படத்தில் முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘அரி கொம்பன்’ திரைப்படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், ‘வாழ்க விவசாயி’ படத்தை இயக்கிய பொன்னி மோகனின் அடுத்த படத்திலும் அப்புக்குட்டி நடித்து வருகிறார். கதையின் நாயகனாக நடித்தாலும், தனக்கு பிடித்தமான நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் பட்சத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்திலும் அப்புக்குட்டி நடித்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வரும் அப்புக்குட்டி, தனது நடிப்புப் பயணத்தில் அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க உள்ளார்.