மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழா கோலாகலமாக அமைந்தது. இப்படம் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை A for Apple Studios மற்றும் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படம், ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகும் கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
1980-களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விண்டேஜ் உலகத்தை உருவாக்குவதில் கலை இயக்கத்திற்கும் ஒளிப்பதிவிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ‘பத்தா’ திரைப்படம் தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும், வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து கற்றுக்கொண்டு மனிதர்கள் முன்னேற வேண்டியதன் அவசியத்தை இப்படம் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் தனக்கு அளித்த ஆதரவை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
பாடலாசிரியர் தமிழ், இது தனது முதல் ஆடியோ வெளியீட்டு விழா என்றும், ‘பத்தா’ படத்துக்காக வித்தியாசமான முறையில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இயக்குநர் பாலாஜி தரணிதரன் தன்னை தொடர்ந்து வழிநடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடலாசிரியர் கானா ஜானி, விஜய் சேதுபதியின் ரசிகராக இருக்கும் தனக்கு இப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்தார். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் முதன்முறையாக தன்னைத் தொடர்புகொண்டு பாடல் உருவாக்கும் வாய்ப்பை வழங்கியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
கலை இயக்குநர் டி. முத்துராஜ், ‘பத்தா’ படத்திற்காக 1980-களின் சென்னையை தனி உலகமாக உருவாக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சூழலை மீண்டும் உருவாக்குவதற்காக பல மாதங்கள் பணியாற்றியதாகவும், படத்தின் boxing காட்சிகளுக்கான props உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எடிட்டர் ஆர். கலைவாணன், ‘பத்தா’ வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து வித்தியாசமான அணுகுமுறையை தேவைப்படுத்தியதாகக் கூறினார். ஒவ்வொரு காட்சியின் rhythm மற்றும் shot transition குறித்து மிகுந்த கவனத்துடன் பணியாற்றியதாகவும், இயக்குநர் பாலாஜி தரணிதரனின் அணுகுமுறை அதற்கு பெரிதும் உதவியதாகவும் தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார், பாலாஜி தரணிதரனுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும், படத்தின் முழுமையான உலகம் உருவாக்கப்பட்ட பிறகே படப்பிடிப்புக்கு சென்றதாகவும் கூறினார். குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்பு திறனைப் பாராட்டிய அவர், பல டேக்குகள் சென்றாலும் ஒவ்வொரு முறையும் முழுமையான தொடர்ச்சியுடன் அவர் நடித்தது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் அஜித் அந்தாரே, தமிழ் சினிமாவின் படைப்பாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், பாலாஜி தரணிதரனின் narration தங்களை மிகவும் பாதித்ததாகவும் கூறினார். ‘பத்தா’வின் உலகம் திரைக்கதையை கேட்கும் போதே தங்களுக்குள் உருவாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் முராத் கெதானி, தமிழ் சினிமாவின் மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பை பகிர்ந்துகொண்டதுடன், Cine1 Studios நிறுவனத்தின் முதல் தமிழ் படமாக ‘பத்தா’ அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். படத்தை உருவாக்கிய இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பாடலாசிரியர் விவேக், பாலாஜி தரணிதரனின் முந்தைய படைப்புகளையும், விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தையும் பாராட்டி பேசினார். இயக்குநருக்கு முழுமையான படைப்பு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இயக்குநர்கள் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பாலாஜி தரணிதரனின் படைப்புகளைப் பாராட்டிய இருவரும், விஜய் சேதுபதியின் நடிப்பையும் அட்லியின் தயாரிப்புப் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பேசினர்.
நடிகை லிஜோமோல் ஜோஸ், ‘பத்தா’ தனக்கு பல்வேறு வகைகளில் சிறப்பான படம் என்றும், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்தார். இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன், கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘பத்தா’ படத்தின் திரைக்கதையை எழுதத் தொடங்கியதாகவும், திரைக்கதையை முடித்ததும் முதலில் விஜய் சேதுபதியிடம் கதையை கூறியதாகவும் தெரிவித்தார். பின்னர் விஜய் சேதுபதி மூலம் அட்லியிடம் கதை சென்றதாகவும், கதையைக் கேட்ட உடனேயே படத்தை உருவாக்குவதற்கு அட்லி, அஜித் அந்தாரே மற்றும் முராத் கெதானி ஆகியோர் சம்மதித்ததாகவும் அவர் கூறினார்.
படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், ‘பத்தா’ மூலம் பாலாஜி தரணிதரன் போன்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, அட்லி உள்ளிட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பாலாஜி தரணிதரனுடனான தனது நீண்டகால நட்பையும் நினைவுகூர்ந்தார். லிஜோமோல் ஜோஸின் நடிப்பையும், சாய் அப்யங்கரின் இசையையும் பாராட்டிய அவர், ‘பத்தா’ ஒரு புதிய வகையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இயக்குநர் அட்லி, ‘பத்தா’ தனக்கு ஒரு திரைப்படம் மட்டுமல்ல என்றும், காலம் கடந்தும் நினைவில் நிற்கக்கூடிய படைப்பாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். மனிதநேயம் மற்றும் உறவுகளைப் பேசும் அதே நேரத்தில், புதிய விதமான மாஸ் பொழுதுபோக்கு அனுபவத்தையும் இப்படம் வழங்கும் என அவர் கூறினார். பாலாஜி தரணிதரனின் தனித்துவமான கதை சொல்லும் திறனையும், சாய் அப்யங்கரின் இசையையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘மகளே’ ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், சமீபத்தில் ‘ஜிகுஜிக்கான்’ பாடலும் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லியின் தயாரிப்பு, சாய் அப்யங்கரின் இசை மற்றும் 80-களின் பின்னணி என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘பத்தா’, அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.







