இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் புதிய விளையாட்டு திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. ‘SMASH’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இந்தியாவைச் சேர்ந்த White Nights Entertainment நிறுவனமும், ரஷ்யாவைச் சேர்ந்த Smena Film Company LLC நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
‘Demonte Colony 2’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள White Nights Entertainment நிறுவனம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளிலும் இந்தியத் திரைப்படங்களின் விநியோகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் Smena Film Company உடன் இணைந்து ‘SMASH’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது.
பேட்மிண்டன் வீரர் ஒருவரின் தோல்வி, அதன்பிறகு தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கி பயணிக்கும் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. விளையாட்டு, உணர்வுகள், போராட்டம் மற்றும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனநிலை ஆகியவை படத்தின் மைய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ரஷ்ய பேட்மிண்டன் வீராங்கனையான ஓல்காவை மையமாகக் கொண்ட கதையாக ‘SMASH’ உருவாகிறது. நீண்ட காலம் தேசிய அணியில் இடம்பெற்றும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத ஓல்கா, இந்தியாவில் நடைபெறும் தனது கடைசி போட்டியில் எதிர்பாராத வெற்றியைப் பெறுகிறார். அதன் பின்னர் தனது வாழ்க்கையை நிரூபிக்கும் வாய்ப்பை எதிர்கொள்ளும் அவர், பல்வேறு தடைகளை கடந்து வெற்றிக்காக போராடுவதே கதையின் முக்கியப் பயணமாக அமைந்துள்ளது.
இந்திய தரப்பில் விஜயா சுப்ரமணியன் மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோரும், ரஷ்ய தரப்பில் எகத்தெரினா கோலுபேவாவும் இப்படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்திய பின்னணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது ‘SMASH’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா புதுடெல்லியில் உள்ள Russian House அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரஷ்ய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்வெட்லானா சுப்ஷேவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பேட்மிண்டன் விளையாட்டின் வேகம் மற்றும் போட்டியின் பரபரப்பை திரையில் உணர வைக்கும் வகையில் படத்தின் காட்சியமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஷட்டில்காக் செல்லும் வேகம், வீரர்களின் உடல் உழைப்பு, பார்வையாளர்களின் உற்சாகம் மற்றும் போட்டியின் பதற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு high-energy sports experience-ஐ உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பாக உருவாகும் ‘SMASH’, இரு நாடுகளின் திரைத்துறையினருக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்புக்கு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது. இப்படத்தின் மூலம் விளையாட்டு கதையுடன் இரு நாடுகளின் கலை மற்றும் கலாச்சார இணைப்பையும் வெளிப்படுத்த படக்குழு முயற்சித்து வருகிறது.
இப்படத்தின் இயக்குநர், முழுமையான நடிகர்கள் பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.










