“14 ஆண்டுகளாக காத்திருந்த தருணம் இது” – ‘தி டார்க் ஹெவன்’ வெற்றி குறித்து சித்து!

7

அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘D3’ படத்தை இயக்கியவர்.

மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படம், சமீபத்திய வெளியீடுகளில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்ற கவனத்தைப் பெற்றதுடன், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சில பகுதிகளில் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, ‘தி டார்க் ஹெவன்’ தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிறு முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு இந்த வெற்றி நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் சார்பில் சிறப்பு சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இது வழக்கமான சக்சஸ் மீட் அல்ல என்றும், படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் பேசும்போது, “இந்தப் படத்தை வெளியாகும் ஆறு மாதங்களுக்கு முன்பே பார்த்தேன். அப்போதே இயக்குநர் பாலாஜியிடம் படம் நல்ல த்ரில்லராக வந்திருக்கிறது என்றும், சரியான தேதியில் வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறினேன். ஆனால் இந்தப் படம் வெளியான தேதியில் ஏராளமான படங்கள் வெளியாகின. ஏற்கெனவே ‘மண்டாடி’ திரைப்படமும் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சூழலிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவுதான் முக்கிய காரணம்.

இத்தனை படங்களுக்கு மத்தியில் மக்கள் பெரிய படங்களையும், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும்தான் பார்ப்பார்கள் என்ற சூழலில், இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. படப்பிடிப்பு 60 முதல் 70 சதவீதம் முடிந்த பிறகு ஒரு நடிகருடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று முடிவெடுத்து, படத்தை நிறுத்திவிட்டு வேறு நடிகரை வைத்து மீண்டும் படத்தை உருவாக்குவது சாதாரணமான முடிவு அல்ல. அப்படிப்பட்ட சூழலில் சித்து இந்தப் படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வந்தது பாராட்டுக்குரியது. அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, அனைத்தையும் முறையாகப் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டு, பின்னர் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இல்லையென்றால் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், வாரத்திற்கு ஆறு, ஏழு படங்கள் வெளியாகும் நிலையும், சில வாரங்களில் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையும் மாற வேண்டும். வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வெளியிட முடியாத சூழலை முறைப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் மீறி இந்தப் படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறு முதலீட்டுப் படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்க பிவிஆர் சினிமா போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். 60 முதல் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்தப் படத்தைத் தூக்கிப் போட்ட தருணம் இன்னும் என் கண்களுக்குள் இருக்கிறது. இந்தப் படம் உருவாக தயாரிப்பாளர்கள் ஷரண் மற்றும் கோபால் இருவரும் முக்கியமானவர்கள். அதற்கு அப்பாற்பட்டு என் மனைவி, சகோதரர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் என பலரும் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார் ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். சித்து, ரித்விகா, தர்ஷிகா ஆகியோர் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்தனர். சில நேரங்களில் 18 மணி நேரம் கூட வேலை செய்திருக்கிறார்கள். சித்துவும் என்னுடன் தொடர்ந்து பயணித்து இந்தப் படத்திற்காக உழைத்தார்.

என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகேவுக்கு மிகப்பெரிய நன்றி. என்னுடைய முதல் படத்திற்கும் அடுத்த படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர். கருத்து வேறுபாடுகள் வந்தாலும் வெளிப்படையாகப் பேசிக்கொண்டு மீண்டும் நண்பர்களாகவே பயணிப்போம். அதேபோல் எடிட்டர் ராஜா ஆறுமுகமும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். ஏற்கெனவே ஒரு நடிகரை வைத்து எடுத்த காட்சிகளில் தேவையற்றவற்றை நீக்கி, தேவையான பகுதிகளை மீண்டும் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் இணைத்து ஒரு படமாக உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல. அதை அவர் சிறப்பாக செய்தார்.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜி இந்தப் பயணத்தில் எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். இந்தப் படம் வந்தால் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் ஆகிய மூன்று பேருக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று அப்போதே கூறினேன். இன்று அதுதான் நடந்திருக்கிறது. சக்தி பாலாஜியின் இசையைப் பற்றி பலரும் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அவர் பெரிய அளவில் வருவார் என்று என் இதயத்திலிருந்து சொல்கிறேன்.

இந்தச் சந்திப்பை வழக்கமான சக்சஸ் மீட் போல் நடத்த விரும்பவில்லை. ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பத்திரிகையாளர் காட்சியில் நீங்கள் கொடுத்த கைதட்டல்தான் திரையரங்கு வரை நீண்டு சென்றிருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி. விரைவில் பெரிய வெற்றி வசூல் விவரங்களுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறோம்” என்றார்.

நடிகை தர்ஷிகா பேசும்போது, “வேர்ட் ஆஃப் மௌத்தை நான் நம்புகிறேன். ஒரு விஷயத்தை நேர்மறையாகச் சொல்லும்போது அது பலரிடம் சென்றடைகிறது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதை நம்பி படம் பார்க்க வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி.

பொதுவாக ஒருவர் தனது முதல் படத்தைப் பற்றி எத்தனை ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும், ‘இதுதான் என்னுடைய முதல் படம்’ என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அப்படி பெருமையாகச் சொல்லக்கூடிய படமாக ‘தி டார்க் ஹெவன்’ அமைந்திருக்கிறது. இது எனது முதல் படம் என்பதை எப்போதும் பெருமையாகக் கூறுவேன்” என்றார்.

நடிகை ரித்விகா பேசும்போது, “ஊடகங்களின் விமர்சனங்களும், பத்திரிகைகளில் எழுதப்பட்ட விஷயங்களும் மக்களிடம் சென்றிருக்கின்றன. அதன் மூலம் படம் திரையரங்குகளில் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இது மட்டும் போதாது. இந்தப் படம் இன்னும் பலரிடம் சென்றடைய வேண்டும்.

முக்கிய ஊடகங்களைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பலர் ரீல்ஸ் செய்து படத்தைப் பற்றி பகிர்ந்து வருகின்றனர். எல்லா திரையரங்குகளிலும் கூட்டம் வர வேண்டும். மக்கள் அனைத்து படங்களையும் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் திரையரங்கு அனுபவம் கிடைக்கும். நான் முன்பே கூறியது போல, ‘தி டார்க் ஹெவன்’ திரையரங்கில் பார்க்க வேண்டிய படம். ஓடிடி வரும் வரை காத்திருக்காமல் படங்களை திரையரங்கில் வந்து பாருங்கள். அப்போதுதான் சினிமா வளர்ச்சி பெறும்” என்றார்.

படத்தின் நாயகன் சித்து பேசும்போது, “தனஞ்ஜெயன் சார் எப்போதும் சிறு படங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி. இந்தத் தருணத்திற்காக நான் 14 ஆண்டுகள் காத்திருந்தேன்.

சாலிகிராமத்தில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு சினிமா வாய்ப்பு தேடி, பல நிறுவனங்களுக்கு புகைப்படங்களை எடுத்துச் சென்று கொடுத்திருக்கிறேன். அது ஒரு பெரிய தேடல். அந்த காலகட்டத்தில் பசி, அவமானம் என பலவற்றை சந்தித்திருக்கிறேன். பல இடங்களில் புகைப்படங்களை கொடுத்துவிட்டு, உதவி இயக்குநரிடமிருந்து அடுத்த நாள் ஒரு அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் இருக்கின்றன.

நான் வாய்ப்பு கேட்டவர்களில் பலர் நடித்து பெரிய அளவில் வளர்ந்து, அவர்களது படங்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவதை திரையரங்கில் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் நமக்கான நாள் எப்போது வரும் என்ற ஏக்கமும் இருந்தது. தூக்கமில்லாமல் இருந்த நாட்களும் உண்டு.

இப்போது நான் ஆசைப்பட்டபடி பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் சென்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக எத்தனை நாட்கள் ஆசைப்பட்டிருக்கிறோம். அது இப்போது நடக்கிறது.

‘ஜிகர்தண்டா’ படத்தில் சினிமாவை ஒரு தேவதை போல குறிப்பிட்டு ஒரு வசனம் வரும். சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ, அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஒரு ஆரம்பம். ஒரு நல்ல அறிமுகமாக அமைந்திருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணமாக பலர் இருக்கிறார்கள். ஒருவரை மட்டும் குறிப்பிட வேண்டும் என்றால் இயக்குநர் பாலாஜி சகோதரரைத்தான் சொல்வேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

இந்தச் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மற்றும் நடிகர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப், விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ படத்திற்கு தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பை முன்னிட்டு, அதன் திரையரங்கு வெளியீடும் மேலும் விரிவடைந்து வருகிறது. சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க முடியும் என்பதற்கு இப்படத்தின் வெற்றி ஒரு முக்கியமான நம்பிக்கையாக அமைந்துள்ளது.