தந்தை – மகள் பாசத்தின் உணர்வுப்பூர்வமான இசைப் பயணம் – ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் ‘ஜோ ஜோ மா’ வெளியீடு!

5

அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை – மகள் பாசத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலைப் பாடகர் ஹரிசரண் பாடியுள்ளார். பாடலாசிரியர் மோகன்ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியாத பாசப் பிணைப்பையும் இசையின் வழியாக வெளிப்படுத்தும் வகையில் ‘ஜோ ஜோ மா’ பாடல் உருவாகியுள்ளது. உணர்வுகளைத் தூண்டும் இசையும், மனதை நெகிழச் செய்யும் வரிகளும் இணைந்து அமைந்துள்ள இப்பாடல், கேட்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல், தந்தை – மகள் பாசத்தை அழுத்தமாகப் பதிவு செய்து இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் பாடலைப் போலவே, ‘ஜோ ஜோ மா’ பாடலும் தந்தை – மகள் உறவின் உணர்வுப்பூர்வமான தருணங்களை இசையின் மூலம் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

டி. இமானின் மென்மையான இசையமைப்பும், ஹரிசரணின் உணர்ச்சிகரமான குரலும், மோகன்ராஜனின் அர்த்தமுள்ள வரிகளும் இப்பாடலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளன. இதனால், ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நட்சத்திரக் கூட்டணியில் ‘சிக்னல் அட் 11.30’!

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் மற்றும் ஆர்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி இணைந்து தயாரித்துள்ளனர். ஏ.கே. நாகராஜன் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் மற்றும் கலை இயக்குநர் முனி கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியாகியுள்ள நிலையில், ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் வெளியீடு குறித்த தகவல்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.