விஜயதசமி விருந்தாக அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ – அக்டோபர் 20-ல் சோனி விழாவில் ஒளிபரப்பு!

17

இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை அக்டோபர் 20-ம் தேதி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அதிரடி ஆக்‌ஷன், குடும்பப் பாசம், பழிவாங்கும் உணர்வுகள் எனப் பல அம்சங்களைக் கொண்ட இப்படம், பண்டிகை நாளில் ரசிகர்களுக்கு உற்சாகமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கவுள்ளது.

குடும்பத்திற்காக மீண்டும் களமிறங்கும் முன்னாள் கேங்ஸ்டர்!

தனது கடந்த கால வாழ்க்கையை விட்டு விலகி, குடும்பத்துடன் அமைதியாக வாழ விரும்பும் முன்னாள் கேங்ஸ்டரின் கதையை மையமாகக் கொண்டு ‘குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளது. அவரது மகனுக்குப் பிரச்சனை ஏற்படும்போது, மீண்டும் தான் விட்டுச் சென்ற பழைய உலகத்திற்குள் நுழைய வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து நிகழும் அதிரடி சம்பவங்களும், உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தின் கதையை நகர்த்துகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராப், பிரபு, பிரசன்னா, சுனில், பிரியா பிரகாஷ் வாரியர், கார்த்திகேயா தேவ் மற்றும் ரகு ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள், ஸ்டைலான அணுகுமுறை, பழைய நினைவுகளைத் தூண்டும் அம்சங்கள் மற்றும் மாஸ் பொழுதுபோக்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தமிழ் ரசிகர்களுக்கு விஜயதசமி விருந்து!

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) நிறுவனத்தின் தென் பிராந்தியங்களுக்கான தலைமை உள்ளடக்க அதிகாரி ராஜாராமன் எஸ். கூறுகையில், “விஜயதசமி என்பது குடும்பங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் அழகான பண்டிகை. தமிழ் பொழுதுபோக்கின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்த நாளை மேலும் மகிழ்ச்சியானதாக மாற்ற விரும்பினோம். அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து, அதிரடியான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறோம். இந்தப் பண்டிகைக்குப் பொருத்தமான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சோனி விழாவின் பயணம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையிலான மறக்க முடியாத பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதே எங்களது நோக்கம். பெரிய திரையில் படம் பார்க்கும் உணர்வையும் உற்சாகத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்வதுடன், தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரின் திரைப்படத்தைக் கொண்டாடும் மற்றொரு வாய்ப்பையும் இந்த ஒளிபரப்பு ரசிகர்களுக்கு வழங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்துடன் இந்த விஜயதசமியைக் கொண்டாட, அக்டோபர் 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம்.