கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் – ‘அக்கா’ இணையத் தொடரின் டீசர் வெளியீடு!

13

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அக்கா’ இணையத் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்தொடர், வரும் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் நடித்துள்ள இத்தொடர், பெண்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ளது. 1980-களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தத் தொடர், தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்படும் பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.

பாரம்பரியத்திற்கும் பகைமைக்கும் பெயர்பெற்ற பெர்னூருவில், அதிகாரத்தைக் கைப்பற்றவும் தக்கவைக்கவும் பெண்கள் நடத்தும் போராட்டங்களே கதையின் மையமாக அமைகின்றன. மாறிவரும் அதிகாரப் போட்டிகளும், தீவிரமடையும் பகைமைகளும் இந்த இரு பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.

பவானியாக கீர்த்தி சுரேஷ் – ருத்ராவாக ராதிகா ஆப்தே!

அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள ‘அக்கா’ தொடர், வலுவான பெண் கதாபாத்திரங்களையும் அவர்களுக்கு இடையிலான சிக்கலான உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.

தனது பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியானது குறித்தும், தொடரில் நடித்த அனுபவம் குறித்தும் கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “என்னுடைய பிறந்தநாளன்று ‘அக்கா’ டீசர் வெளியாகியிருப்பது மிகவும் சிறப்பானது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மறக்க முடியாத கதாபாத்திரம் பவானி. ராதிகாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய கதாபாத்திரங்கள் கதைக்குப் பல சுவாரஸ்யமான பரிமாணங்களைச் சேர்க்கும்.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் தொடர் ‘அக்கா’. இந்தக் கதையின் தனித்துவமும், அது உருவாக்கியிருக்கும் உலகமும்தான் என்னை மிகவும் ஈர்த்தன. பார்வையாளர்களுக்கும் இந்தத் தொடர் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை ராதிகா ஆப்தே கூறுகையில், “‘அக்கா’ தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பும் டீசர் வெளியீடும் கீர்த்தியின் பிறந்தநாளன்று அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் நான் நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் தனது கொள்கைகளால் வழிநடத்தப்படுபவள்; தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையே கேள்விக்குள்ளாக்கும் இயல்பும் கொண்டவள்.

கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும், அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் உருவாகும் பதற்றங்களும்தான் இந்தத் தொடரில் நடிக்க என்னைச் சம்மதிக்க வைத்தன. கடந்த பல ஆண்டுகளாக நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அந்த வகையில், ‘அக்கா’ எனக்கு மறக்க முடியாத தொடராக இருக்கும். சுவாரஸ்யமான இந்தக் கதையை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பார்வையாளர்களின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

பெண்களின் அதிகாரம், பகைமை, அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான மோதல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அக்கா’, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.