இலங்கையில் நடைபெற்ற சர்வதேச ட்ரோன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக ட்ரோன் கலைஞர் அரவிந்த் குமார்!
தமிழ் திரையுலகில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ட்ரோன் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ள ட்ரோன்மேன் அரவிந்த் குமார், இலங்கையில் நடைபெற்ற ‘SLIIT Robo Fest 2026’ ட்ரோன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது ட்ரோன்மேன் அகாடமி அணியைச் சேர்ந்த எம். அரவிந்த் குமார் மற்றும் எம். ஸ்ரீமன் ஆகியோர் இணைந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இலங்கையின் மாலபே பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (SLIIT) கல்வி நிறுவனத்தில் செப்டம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், ஓபன் கேட்டகிரி ட்ரோன் சாம்பியன்ஷிப் பிரிவில் ட்ரோன்மேன் அகாடமி அணி தனது மேம்பட்ட தானியங்கி ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான செயல்பாட்டின் மூலம் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் முதலிடத்தைப் பிடித்த அணிக்கு சாம்பியன்ஷிப் பட்டத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
16 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த கல்வி வளர்ச்சியில் பங்களித்து வரும் SLIIT கல்வி நிறுவனம், இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் ‘Robo Fest’ போட்டியை நடத்தி வருகிறது. இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களையும், 400-க்கும் அதிகமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த போட்டியாளர்களையும் இந்த நிகழ்வு ஈர்த்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான போட்டியில் ட்ரோன் சாம்பியன்ஷிப் மற்றும் ரோவர் போட்டிகள் இடம்பெற்றன.
பல்வேறு திறமையான போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ட்ரோன்மேன் அகாடமி அணியின் தானியங்கி ட்ரோன் தொழில்நுட்பமும் துல்லியமான செயல்பாடும் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. சர்வதேச அளவில் இந்தியாவின் ட்ரோன் தொழில்நுட்பத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
ட்ரோன்மேன் அகாடமியின் தலைவரான எம். அரவிந்த் குமார், இதற்கு முன்பும் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். ‘NIDAR’ எனப்படும் தேசிய ட்ரோன் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான புதுமைச் சவால் போட்டியில், துல்லியமான விவசாயத் தொழில்நுட்பப் பிரிவில் இந்தியாவின் முதல் தேசிய அளவிலான ட்ரோன் விருதை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவுக் கலைஞராகப் பணியாற்றி வரும் அரவிந்த் குமார், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், ‘மண்டாடி’ திரைப்படத்தின் FPV ட்ரோன் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் ‘ரணபலி’, பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ உள்ளிட்ட எதிர்பார்ப்புக்குரிய படங்களிலும் தனது ட்ரோன் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
திரைப்படப் பணிகளுடன் தொழில்நுட்பக் கல்வியிலும் ஆர்வம் கொண்டுள்ள அரவிந்த் குமார், இளைஞர்களிடையே ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகம், சிஹாரம் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ட்ரோன் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார்.
திரைப்படத் துறையில் தனது திறமையை நிரூபித்ததுடன், சர்வதேச ட்ரோன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் முதலிடம் பிடித்துள்ள அரவிந்த் குமார் மற்றும் ட்ரோன்மேன் அகாடமி அணியின் இந்த வெற்றி, இந்திய ட்ரோன் தொழில்நுட்பத் துறைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
ட்ரோன்மேன் அகாடமி குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.dronemanacademy.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.