‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜான் டோ’ (John Doe) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் முதன்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் மதுமிதா கூறுகையில், “ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா? கொலைகாரனா? காணாமல் போன குழந்தையா? அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒருவரா? என்பதைப் பற்றிய சுவாரசியமான கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் தெரிந்ததற்கும் நம்பப்படுவதற்கும் இடையிலான எல்லைக்கோடு மறையத் தொடங்குகிறது.
கதையின் நாயகனான சந்துரு தனக்குள் எழும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் பயணிக்கும்போது, கடைசிக் கேள்வியைவிட அவருக்குள் எழும் மற்றொரு கேள்வி மிகுந்த கவலையைத் தருகிறது. ஜான் டோவைப் பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றால் என்ன செய்வது என்பதே அந்தக் கேள்வி. இதற்கான பதிலைப் பார்வையாளர்கள் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் காவல்துறை சீருடையில் அர்ஜுன் தாஸ் தோன்றியிருப்பதுடன், அவரது கையில் பொம்மை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியமைப்பு படத்தின் மர்மமான கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, சந்துரு என்ற காவல்துறை அதிகாரிக்கும் ‘ஜான் டோ’ என்ற அடையாளத்துக்கும் இடையிலான தொடர்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கியுள்ளது.
‘ஜான் டோ’ திரைப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் முதன்முறையாகக் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மர்மம், குற்ற விசாரணை மற்றும் உளவியல் சார்ந்த அம்சங்களை மையமாகக் கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவைக் கையாள, முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 இசைக்குழு அமைத்துள்ளது. படத்தொகுப்புப் பணிகளை விஜய் வெங்கடரமணன் மேற்கொள்ள, அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ், அர்ஜுன் தாஸ் மற்றும் இயக்குநர் மதுமிதா ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் ‘ஜான் டோ’ திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் மர்மம் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
