நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கௌரவித்துள்ளார்.
‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அனுமோல். சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர், சமத்துவம் மற்றும் மனிதநேயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தன்னைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ரசிகர்களுக்கு ‘Always Choose Kindness’ என்ற வாசகத்துடன் கையெழுத்திட்டு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அனுமோல், தனது செயல்பாடுகள் மூலமாகவும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் அனுமோலைச் சந்தித்த அவரது ரசிகர்கள், பெண்களின் வலிமையையும் சாதனைகளையும் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, குடும்பத்திற்காக உழைப்பதுடன் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாகத் திகழும் பெண்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசித்தனர். இதற்குச் சம்மதம் தெரிவித்த நடிகை அனுமோல், இந்த முயற்சியில் பங்கேற்க முன்வந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ செல்வ லட்சுமி திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகை அனுமோல், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ஒவ்வொருவரிடமும் உரையாடி அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை அனுமோல், “இங்கு வருகை தந்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் வணக்கமும் நன்றியும். குடும்பத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைப்பதுடன், எந்த நேரத்திலும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறக்கூடிய சூழலில் ஆட்டோ ஓட்டுவது என்பது எளிதானதல்ல. உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையுடன் சொந்தக் காலில் நின்று சுயமரியாதையுடனும் தனித்த அடையாளத்துடனும் வாழ்வதற்காகவும் நீங்கள் உழைப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
என்னைப் பொறுத்தவரை, எல்லோரும் சமம் என்றே கருதுகிறேன். பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருப்பதுடன், ஆரோக்கியம் மற்றும் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உறுதிசெய்யப்பட வேண்டும். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, எந்தவிதப் பாகுபாடுமின்றி மனிதநேயத்துடன் வாழ்வதும் அவசியம்.
உருவம், நிறம், மொழி என ஏதேனும் காரணங்களைக் கூறி யாராவது உங்களைச் சிறுமைப்படுத்தினால், அதனைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் லட்சியத்தில் மன உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தப் பிரத்யேகமான நாளில் உங்களுடன் கலந்துரையாடுவதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்” என்றார்.
தொடர்ந்து, ஒவ்வொரு பெண் ஆட்டோ ஓட்டுநரையும் தனித்தனியாகச் சந்தித்த அனுமோல், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார். மேலும், அவர்களது குடும்பத் தேவைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் அக்கறையுடன் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் பவானி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும்போது, “இதற்கு முன்பும் பல தொண்டு நிறுவனங்கள் எனக்கு உதவி செய்துள்ளன. ஆனால், எங்களின் தேவைகளை அறிந்து இன்சுலேட்டட் வாட்டர் பாட்டில்கள், தரமான நாப்கின்கள், பவர் பேங்க், முதலுதவிப் பெட்டி ஆகியவற்றை வழங்கியதுடன், சுவையான உணவும் அளித்து எங்களைக் கௌரவப்படுத்தியதை வாழ்க்கையில் மறக்க முடியாது. ஐ லவ் யூ மேடம்!” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெண்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் அங்கீகரித்து, அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூக அக்கறையையும் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் முயற்சியாக அமைந்தது.




