“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்!” – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி

7

காதல், உணர்வுகள், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஃபீல் குட் திரைப்படமாக ‘ஹைக்கூ’ உருவாகியுள்ளதாக அதன் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி தெரிவித்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து, மனதுக்கு நெருக்கமான காதல் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், வண்ணமயமான காட்சியமைப்புகள் மற்றும் இதயத்தை வருடும் புரமோஷன் பாடல்கள் மூலம் ஏற்கெனவே கவனம் ஈர்த்துள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம், அனைத்து வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் உருவாக்கம் மற்றும் நடிகர்களின் பங்களிப்பு குறித்து இயக்குநர் யுவராஜ் சின்னசாமி தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, “‘ஹைக்கூ’ படத்தை உருவாக்கும்போது, எல்லா வயதினரையும் கவரக்கூடிய ஒரு காதல் கதையைச் சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. பொதுவாக, காதல் கதைகளுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். ஆனால், வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவரும் காதல் கதைகள், ஒவ்வொருவரும் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய உணர்வுகளைக் கொண்டிருக்கும். தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் கதையைப் புரிந்துகொண்டு அதன் மீது நம்பிக்கை வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

மேலும், கதாநாயகன் ஏகனின் கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், “ஒரு பெண்ணின் காதலைப் பெற முயற்சிக்கும் காதலன் என்ற எல்லைக்குள் மட்டும் ஏகனின் கதாபாத்திரம் நின்றுவிடுவதில்லை. எதிர்பாராத விதமாக அவர் செய்யும் ஒரு செயல், அவரது வாழ்க்கையையே மாற்றுகிறது. அதன்பிறகு அவர் எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வமான போராட்டங்கள் கதாபாத்திரத்துக்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கின்றன. ஏகனின் கதாபாத்திரத்துடன் ரசிகர்கள் நிச்சயம் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

படத்தின் முதன்மை நடிகர்களின் நடிப்பு குறித்துப் பேசிய யுவராஜ் சின்னசாமி, “படத்தின் மூன்று முதன்மை நடிகர்களுக்கும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய சவாலான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களின் உணர்வுகளை உண்மையாகப் புரிந்துகொண்டு, அவற்றை உள்வாங்கும்போதுதான் இத்தகைய நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் படத்தில் அதைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ‘ஹைக்கூ’ இதயத்தை வருடும் பொழுதுபோக்குத் திரைப்படம். இந்தக் காதல் கதையை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோரின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் ‘ஹைக்கூ’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோருடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணியன் சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஆடியோ தரவரிசையில் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன. பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் பி, ‘ஹைக்கூ’ திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான பக்கங்களைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல வரும் இப்படம், அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.